ADDED : பிப் 25, 2024 02:42 AM

பெங்களூரு: அமலாக்கத்துறை அதிகாரிகள் முன், காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா, இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணைக்கு ஆஜரானார்.
கோலார் மாவட்டம், மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா. கொச்சிமூல் எனப்படும் கோலார் - சிக்கபல்லாப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவராக உள்ளார். இந்த கூட்டுறவு சங்கத்தில் காலியாக இருந்த, பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்தாமல் பணம் வாங்கிக் கொண்டு, ஆள்சேர்ப்பு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 8ம் தேதி, நஞ்சேகவுடாவின் வீடு, அலுவலகம், கொச்சிமூல் அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நஞ்சேகவுடா வீட்டில் இருந்து, கணக்கில் வராத 16 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடரிபாக விசாரணைக்கு ஆஜராகும்படி, நஞ்சேகவுடாவுக்கு அமலாக்க அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் காலை, பெங்களூரு சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தினர்.
நேற்றும் 2வது நாளாக, அமலாக்க அதிகாரிகள் முன், நஞ்சேகவுடா விசாரணைக்கு ஆஜரானார். ஆள்சேர்ப்பு குறித்தும், கணக்கில் வராத பணம் பற்றியும், அவரிடம் விசாரணை நடத்தி அதிகாரிகள் தகவல் பெற்று உள்ளனர்.
விசாரணை முடிந்து வெளியே வந்த நஞ்சேகவுடா, ''அமலாக்க அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்து உள்ளேன். என்னை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பேன்,'' என்றார்.