காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவி?: சித்தராமையா, சிவகுமார் 'கப்சிப்'
காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவி?: சித்தராமையா, சிவகுமார் 'கப்சிப்'
ADDED : ஜூலை 23, 2024 05:31 PM

கர்நாடகா காங்கிரஸ் அரசு மீதான சேதத்தை கட்டுப்படுத்தும் வகையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்க சோனியா திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் 2023ல் 135 இடங்களுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. பல நெருக்கடிகளுக்கு இடையில், ஓராண்டை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நிறைவு செய்துள்ளது. முதல்வர் சித்தராமையா தரப்பும், துணை முதல்வர் சிவகுமார் தரப்பும் அவ்வப்போது உறுமிக் கொண்டுள்ளனர். இதில் தலைவர்கள், குட்டி தலைவர்கள் என்ற பாகுபாடு இல்லை.
பலத்த அடி
லோக்சபா தேர்தல் முடிவு, இரு தரப்பினருக்கும் பலத்த அடியாக கருதப்படுகிறது. அதனால் முதல்வர் மாற்றம், கூடுதல் துணை முதல்வர்கள் நியமனம் ஆகிய பிரச்னைகளை கையில் எடுத்துக் கொண்டு உள்ளனர்.
சித்தராமையா ஆதரவாளர்கள், மூன்று துணை முதல்வர் பதவியை உருவாக்க வேண்டும் என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடத் துவங்கி உள்ளனர். இது சோனியா, ராகுலுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், 83வது பிறந்த நாளான, ஜூலை 21ல், காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, சோனியா உட்பட பல தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். அத்துடன், பெங்களூரில் அவரது இல்லத்தில் வெளியே நின்றிருந்த தொண்டர்கள், 'கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும்' என்று கோஷம் எழுப்பினர்.
சோனியா கசப்பு
சில நாட்களுக்கு முன்பு புதுடில்லி சென்றிருந்த முதல்வர் சித்தராமையா, சோனியாவை சந்தித்துள்ளார். அப்போது சோனியா, “கர்நாடகாவில் முதல்வர், துணை முதல்வர் பதவி தொடர்பாக அமைச்சர்கள் பேசுவது, மாநில மக்களிடையே கட்சியின் மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது,” என அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், “மாநில காங்கிரஸ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை மக்களும் நம்பத் துவங்கி உள்ளனர். இவ்வேளையில், முதல்வர் மாற்றம் குறித்த பேச்சு எழும்போது, முதல்வர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை முன்மொழிய உள்ளேன்,” என தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
மேலிட தலைவர் ஒருவர் கூறுகையில், 'தற்போது காங்கிரஸ் தலைவராகவும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராகவும் கார்கே சிறப்பாக செயல்படுகிறார். லோக்சபாவில் வலுவான எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் அறியப்படுகிறார். இதனால் கார்கேயின் அடையாளம் சற்று குறைந்துள்ளது. கட்சிக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வரும் கார்கேவுக்கு கவுரவம் அளிக்கும் வகையில், முதல்வர் பதவி வழங்க சோனியா விரும்புகிறார்' என்றார்.
மேலிடத்தின் இந்த அதிரடியை சற்றும் எதிர்பார்க்காத சித்தராமையா, சிவகுமார் தரப்பு பதவி தொடர்பாக எதுவும் பேசாமல், 'கப்சிப்' ஆகி உள்ளனர்.
நமது நிருபர்