காங்., - எம்.பி., சுரேஷ் மீது பா.ஜ., பிரமுகர் வழக்கு
காங்., - எம்.பி., சுரேஷ் மீது பா.ஜ., பிரமுகர் வழக்கு
ADDED : பிப் 02, 2024 11:12 PM
மங்களூரு: தனி நாடாக்க வேண்டும் என, கருத்து தெரிவித்த காங்கிரஸ் - எம்.பி., சுரேஷ் மீது, பா.ஜ., பிரமுகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று முன் தினம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த, பெங்களூரு ரூரல் காங்., - எம்.பி., சுரேஷ், 'மத்திய அரசு, நமது வரி பணத்தை வட மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கிறது. அதிகமான வரி செலுத்தும் தென் மாநிலங்களுக்கு, அநியாயம் செய்கிறது. இப்படியே நீடித்தால், தனி தென்னிந்தியா நாடு வேண்டும் என, குரல் எழுப்ப வேண்டி வரும்' என கூறினார்.
இதனால் பா.ஜ.,வினர் பொங்கி எழுந்து, அதிருப்தி தெரிவித்தனர். அகண்ட இந்தியாவை, உடைக்க முற்படுவதாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், தட்சிண கன்னடா, பன்ட்வாலின், பா.ஜ., பிரமுகர் விகாஸ் என்பவர், மங்களூரின் ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் எம்.பி., சுரேஷ் மீது நேற்று வழக்கு தொடர்ந்தார். மங்களூரு வடக்கு போலீஸ் நிலையத்தில், புகார் செய்துள்ளார்.
பின் விகாஸ் கூறியதாவது:
எம்.பி., சுரேஷ், நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். எம்.பி.,யாக இருந்தும், இந்தியாவை பிரிக்க சதி செய்கிறார்.
இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதிமன்றத்திலும், மங்களூரு வடக்கு போலீஸ் நிலையத்திலும், புகார் செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

