நிதி கேட்ட காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் கைவிரிப்பு! தொகுதி மக்களை சந்திப்பது எப்படி என பலரும் விரக்தி
நிதி கேட்ட காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் கைவிரிப்பு! தொகுதி மக்களை சந்திப்பது எப்படி என பலரும் விரக்தி
ADDED : டிச 18, 2024 10:43 PM

பெலகாவி; தங்கள் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் செய்வதற்கு நிதி கேட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம், ''நிதி ஒதுக்குவது குறித்து பின்னர் பார்க்கலாம்,'' என, முதல்வர் சித்தராமையா கைவிரித்துள்ளார். 'தொகுதி மக்களை எப்படி சந்திப்பது?' என, பல எம்.எல்.ஏ.,க்கள் விரக்தியில் கேள்வி எழுப்புகின்றனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் 'கிரஹ லட்சுமி', அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் 'சக்தி' திட்டம், பி.பி.எல்., ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்துவபவர்களுக்கு மின்சாரம் இலவசம், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 3,000 உதவித்தொகை என, ஐந்து வாக்குறுதித் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
இதற்காக ஆண்டிற்கு 56,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் மாநிலத்தில் பிற வளர்ச்சிப் பணிகள் முற்றிலுமாக முடங்கி உள்ளன.
எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சொற்ப தொகையே, நிதியாக ஒதுக்கப்பட்டு வருகிறது.
வாக்குறுதித் திட்டங்களால் அரசின் 'கஜானா' காலியாகிவிட்டது. 'அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை' என, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதை முதல்வர் சித்தராமையா மறுக்கிறார்.
'வாக்குறுதித் திட்டங்களை நிறுத்திவிட்டு அதற்கு செலவழிக்கும் பணத்தை, வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்க வேண்டும்' என, விஜயநகரா காங்கிரஸ் எம்.எல்.ஏ., கவியப்பா கடந்த மாதம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சிக்கு பதிலடி
பெலகாவியில் தற்போது நடந்து வரும் சட்டசபை குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, முதல்வரிடம் நிதி கேட்பதற்கு வட மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
நேற்று முன்தினம் இரவு பெலகாவியில் உள்ள ரெசார்ட்டில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் நிதி தொடர்பான பேச்சை எடுத்து விடக் கூடாது என, சித்தராமையாவே முந்திக் கொண்டார்.
பெலகாவியில் காந்தி தலைமையில் மாநாடு நடத்தி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்தும், சட்டசபையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும் அவர் பேசிக் கொண்டு இருந்தார்.
நெருக்கடி
அப்போது திடீரென எழுந்த எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர், ''முதல்வரே, என் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்குங்கள். 'தொகுதியில் வேலை எதுவும் நடக்கவில்லை' என, மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்,'' என்று குமுறுனார்.
அவரைத் தொடர்ந்து பங்காருபேட் எம்.எல்.ஏ., நாராயணசாமி, ''ஐந்து வாக்குறுதித் திட்டங்களை அமல்படுத்தி உள்ளீர்கள். இல்லை என்று சொல்லவில்லை.
''ஆனால் எத்தனை நாட்கள் தான், வாக்குறுதித் திட்டங்களை சொல்லி மக்களை சந்திப்பது? மக்களை எப்படி சந்திப்பது என்றே தெரியவில்லை,'' என்றார்.
இதையடுத்து, மேலும் சில எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் தொகுதிக்கு நிதி ஒதுக்கும்படி, முதல்வரிடம் நேரடியாக கேட்க ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத சித்தராமையா, ''நிதி ஒதுக்குவது குறித்து பின்னர் பார்க்கலாம்,'' என்று கூறி, அவர்களை சமாளிக்க முயன்றார்.
அவரது பதிலால் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். ''அடுத்த ஆண்டு மாநிலத்தின் வருவாய் பெருகும். அனைத்து தொகுதிக்கும் நிதி ஒதுக்குகிறேன்,'' என கூறி, அவர்களை முதல்வர் சமாதானப்படுத்தினார். பின், கூட்டம் தொடர்ந்து நடந்தது.
இதற்கிடையில் துணை முதல்வரும், பெங்களூரு நகர மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சிவகுமாருக்கு, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உட்பட 15 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் எழுதியுள்ள கடிதத்தில், 'எங்கள் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள, சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு முதல்வர் சித்தராமையாவையும் அவர்கள் சந்தித்து, நிதி ஒதுக்கக்கோரி கடிதம் அளித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் நிதி கேட்க ஆரம்பித்து இருப்பது, முதல்வரை நெருக்கடியில் சிக்கவைத்துள்ளது.