ADDED : மார் 19, 2024 10:59 PM
எதிர்க்கட்சிகள் பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வை, அப்பா, மகன்கள் கட்சி என, காங்கிரஸ் விமர்சிக்கிறது. ஆனால் இப்போது, காங்கிரசே குடும்ப அரசியலுக்கு, தலை வணங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், பல தொகுதிகளில் அமைச்சர்கள், தலைவர்களின் குடும்பத்தினருக்கு 'சீட்' கொடுக்க ஆலோசிக்கிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளில் கைப்பற்றி, பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்த காங்கிரஸ், தற்போது லோக்சபா தேர்தல் என்ற அக்னி பரீட்சைக்கு தயாராகிறது.
'டார்கெட்'
ஆளுங்கட்சியாக இருப்பதால், குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என, மாநில தலைவர்களுக்கு கட்சி மேலிடம், 'டார்கெட்' நிர்ணயித்துள்ளது.
இதற்காக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் உட்பட, தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.
ஆனால் திறமையான வேட்பாளர்கள் கிடைக்காமல், கையை பிசைகின்றனர்.
பல தொகுதிகளில் சீட்டுக்கு பலர் முட்டி மோதுகின்றனர் என்றாலும், அவர்களுக்கு வெற்றி பெறும் திறன் இல்லை. இவர்களுக்கு சீட் கொடுக்க தலைவர்களும் தயாராக இல்லை.
லோக்சபா தேர்தலுக்கு, நான்கைந்து மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகி வரும் காங்கிரஸ், பல முறை ஆய்வு நடத்தியது. தொகுதிகளில் அமைச்சர்களுக்கு நல்ல செல்வாக்குள்ளது.
வேட்பாளர் இல்லாத தொகுதிகளில், இவர்களை களமிறக்கினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக ஆய்வறிக்கை கூறியது. இதன்படி குறைந்தபட்சம் ஒன்பது அமைச்சர்களை களமிறக்க, மாநில தலைவர் சிவகுமார் முடிவு செய்தார். தேர்தலுக்கு தயாராகும்படி உத்தரவிட்டார்.
ஆனால் இருப்பதை விட்டு விட்டு, பறப்பதை பிடிப்பதில், அமைச்சர்களுக்கு விருப்பம் இல்லை. தேசிய அரசியல் தங்களுக்கு தேவையில்லை என, கறாராக கூறிவிட்டனர். தங்களின் மகன் அல்லது மகளுக்கு சீட் தாருங்கள். அவர்களை வெற்றி பெற வைக்கிறோம் என்கின்றனர். மகன் அல்லது மகளுக்கு சீட் கொடுத்தால், குடும்ப அரசியல் என்ற அவப்பெயர் வருமே என, காங்., மேலிடம் யோசிக்கிறது.
பிரச்னைகள் இல்லாத, ஏழு தொகுதிகளுக்கு மட்டும், வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ், இரண்டாம் கட்ட பட்டியலை வெளியிட முடியாமல் திணறுகிறது.
வேட்பாளர்களை முடிவு செய்யாததால், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். காங்., வேட்பாளர் பட்டியல் தாமதமாவதற்கு, பா.ஜ.,வின் சாணக்கிய தனமும் காரணம். நிறைய புதிய முகங்களை களமிறக்கியுள்ளது. இது, காங்கிரசை தலைவலியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த வேட்பாளர்களுக்கு பதிலாக, மாற்று வேட்பாளர்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. மைசூரில் பிரதாப் சிம்ஹா, பா.ஜ., வேட்பாளராவார் என, நினைத்து காங்., செய்தி தொடர்பாளர் லட்சுமணை களமிறக்க மேலிடம் விரும்பியது. ஆனால் மைசூரில் அரச குடும்பத்தின் யதுவீர், பா.ஜ., வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இதை எதிர்பார்க்காத காங்கிரஸ், இவருக்கு நிகராக யாரை நிறுத்துவது என, மண்டையை குடைந்து ஆலோசிக்கிறது. அதேபோன்று, பெங்களூரு வடக்கில் ஷோபா, உடுப்பி - சிக்கமகளூரில் கோட்டா சீனிவாச பூஜாரி களத்தில் இருப்பதும், காங்கிரசுக்கு பீதியை கிளப்பியுள்ளது.
வேட்பாளர் பட்டியல்
பா.ஜ., வை எதிர்கொள்ள, அமைச்சர்கள், முக்கிய தலைவர்களின் மகன் அல்லது மகளுக்கு சீட் கொடுத்து, குடும்ப அரசியலுக்கு தலை வணங்குவதை தவிர, காங்கிரசுக்கு வேறு வழியில்லை.
மற்றவரை களமிறக்கி ரிஸ்க் எடுக்க காங்., விரும்பவில்லை. அப்படி செய்தால் கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் தேவையில்லை. அந்த வேலையை காங்கிரசாரே செய்துவிடுவர் என்பது, மேலிடத்துக்கு நன்றாக தெரியும். இதை மனதில் கொண்டு, இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை தயாரிக்கிறது.
பெங்களூரு தெற்கில், அமைச்சர் ராமலிங்கரெட்டியின் மகள் சவும்யா, பெங்களூரு சென்ட்ரலில், முன்னாள் மத்திய அமைச்சர் ரெஹமான் கானின் மகன் மன்சூர் அலி கான் காங்., வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர் என, தகவல் வெளியாகியுள்ளது. அதே போன்று, பல்வேறு தொகுதிகளில், அமைச்சர்கள், தலைவர்களின் குடும்பத்தினரின் பெயர், வேட்பாளர் பட்டியலில் இடம் பெற கூடும்.
இத்தகைய குடும்ப அரசியலுக்கு எதிராக பேசும் காங்கிரசும், குடும்ப அரசியலுக்கு விதி விலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளது.
இதனால் வளர்ந்து வரும், இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்தவருக்கு, ஒவ்வொரு தேர்தலிலும் சீட் வழங்கப்படுகிறது.
செல்வாக்கு மிக்க அமைச்சர்கள், தலைவர்களின் மகன் அல்லது மகளுக்கு சீட் மறுத்தால், அவர்கள் அதிருப்தி அடைந்து, ஊடகத்தினர் முன்னிலையில், தங்களுக்கு அநியாயம் நடந்ததாக நீ....ண்ட அறிக்கை வெளியிட்டு, கட்சி தாவுவர்.
அல்லது கட்சியில் இருந்து கொண்டே, உள்குத்து வேலை செய்து சொந்த கட்சி வேட்பாளரை தோற்கடிப்பர். இதற்கு பயந்து இவர்களின் குடும்பத்தினருக்கு சீட் கொடுக்கின்றனர். தற்போது காங்கிரசும் கூட அதே சூழ்நிலையில் சிக்கியுள்ளது.
கட்சி மேலிட உத்தரவின்படி, அதிக தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில், குடும்ப அரசியலுக்கு காங்., கை கொடுக்கிறது. சீட் எதிர்பார்த்து பல ஆண்டுகளாக உழைத்த தலைவர்களை கை விடுகிறது. 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என, தொண்டர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.
- நமது நிருபர் -

