ADDED : நவ 24, 2024 11:04 PM

மைசூரு: ''கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது,'' என்று, சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா உண்மையை உடைத்துள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், என்னை காங்கிரசுக்கு வரும்படி அக்கட்சியின் சிலர் அழைப்பு விடுத்தனர். பின், சித்தராமையா உட்பட யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் நிகில் குமாரசாமி வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஜனநாயக நாட்டில் தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜமானது.
மூன்று முறை தேர்தலில் தோற்றவர்கள் கூட மீண்டும் வெற்றி பெற்று அமைச்சரான உதாரணமும் உண்டு. மூன்று முறை அடைந்த தோல்வியை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, கட்சியை கட்டமைக்க நிகில் முயற்சிக்க வேண்டும்.
இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு, எங்கள் கட்சியினர் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், என் மகன் ஹரிஷ் கவுடாவை பிரசாரத்தில் பயன்படுத்தினர். எனது மகன் தான் தேவை என்று, தேவகவுடா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.