பீஹார் தேர்தலில் போட்டியிடும் காங். வேட்பாளர்கள்; நாளை கூடுகிறது காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு
பீஹார் தேர்தலில் போட்டியிடும் காங். வேட்பாளர்கள்; நாளை கூடுகிறது காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு
ADDED : அக் 07, 2025 01:20 PM

புதுடில்லி; பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு நாளை (அக்.8) கூடுகிறது. பீஹார் சட்டசபைக்கு நவ.6 மற்றும் நவ.11 என இரு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஓட்டுகள் நவ.14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட இருக்கின்றன.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை தயாரிப்பதில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகி விட்டன. பீஹாரில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணிகளுக்கு எத்தனை இடங்கள் தருவது என்பது குறித்து காங்கிரஸ் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு நாளை (அக்.8) கூடுகிறது. இந்த கூட்டத்தில் இம்முறை மொத்தம் எத்தனை தொகுதிகள், எவ்வளவு வேட்பாளர்கள் என்பது இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் உள்ள தொகுதிகள் எவை என்பது கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டு, அங்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.