பா.ஜ.,வின் வெற்றியை கொண்டாடுகிறது காங்கிரஸ்: கேரள முதல்வர் புகார்
பா.ஜ.,வின் வெற்றியை கொண்டாடுகிறது காங்கிரஸ்: கேரள முதல்வர் புகார்
UPDATED : பிப் 19, 2025 06:30 PM
ADDED : பிப் 19, 2025 06:29 PM

திருவனந்தபுரம்: டில்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றியைக் கொண்டாடும் அளவுக்கு இப்போது சீரழிந்துவிட்டது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் மற்றும் ராகுல் மீது குற்றம்சாட்டினார்.
திருவனந்தபுரத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பின் 35வது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.
அதை தொடர்ந்து பினராயி விஜயன் பேசியதாவது:
மற்ற கட்சிகளுடன் சேர்ந்து பா.ஜ.,வை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதிப்பாட்டிலிருந்து காங்கிரஸ் பின்வாங்குகிறது. காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பில்லாத டில்லியில் ஆம் ஆத்மிக்கு எதிராக, ராகுல் தானே பிரச்சாரம் செய்தார். இதன் காரணமாக பா.ஜ., ஆட்சிக்கு வர உதவியது.
மேலும் டில்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் 65 இடங்களில் காங்கிரஸ் தனது டெபாசிட்டை இழந்தது. இவ்வாறு இருக்கும் போது, ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.,விடம் தோல்வியடைந்தபோது அவர்கள் கொண்டாடினர். காங்கிரஸ் இப்போது பா.ஜ.,வின் வெற்றியைக் கொண்டாடும் கட்சியாக சீரழிந்துவிட்டது.
காங்கிரசின் தவறான அரசியல் அணுகுமுறையால் ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வெற்றி பெற உதவியது.இவ்வாறு முதல்வர் பேசினார்.
இண்டியா கூட்டணி பற்றி குறிப்பிடுகையில், 'லோக்சபா தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான பா.ஜ,.,வின் நம்பிக்கையை தகர்த்த கூட்டணியை இப்போது காங்கிரஸ் கைவிட்டுவிட்டது.
டில்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பியது காங்கிரஸ்தான். இதன் காரணமாக மத்திய அமைப்புகள் தலையிட்டு டில்லி துணை முதல்வரை கைது செய்தன. காங்கிரஸ் கெஜ்ரிவாலைக் கைது செய்யக் கூட கோரியது. காங்கிரஸ் எப்போதும் டில்லியில் பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது' என்றார்.