தொழிலதிபர் மனைவியுடன் தற்கொலை: அமலாக்கத்துறை மீது காங்கிரஸ் புகார்
தொழிலதிபர் மனைவியுடன் தற்கொலை: அமலாக்கத்துறை மீது காங்கிரஸ் புகார்
ADDED : டிச 15, 2024 12:47 AM

போபால்: மத்திய பிரதேசத்தில் தொழிலதிபர் ஒருவர், தன் மனைவியுடன் தற்கொலை செய்துஉள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், அமலாக்கத் துறை மற்றும் பா.ஜ., நிர்வாகிகளின் நெருக்கடி காரணமாகவே தற்கொலை முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.
சமூக வலைதளம்
இங்குள்ள சேஹோர் மாவட்டம் அஸ்தா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் பார்மர், அவரது மனைவி நேஹா நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து மனோஜ் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானது.
ஜனாதிபதி, பிரதமர், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோருக்கு எழுதிய அந்தக் கடிதத்தில், அமலாக்கத் துறை மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் நெருக்கடியால் தற்கொலை செய்வதாக கூறியுள்ளார்.
தன் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும்படி, ராகுலுக்கு அவர் அந்தக் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக தொழிலதிபர் மனோஜ் பார்மர் குடும்பத்தாரிடம் விசாரித்த பின், அதன் உண்மைத் தன்மை தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, காங்., மாநிலத் தலைவர் ஜிது பட்வாரி கூறியதாவது:
காங்கிரஸ் மக்களுக்கான கட்சி. மக்களின் நலனுக்காக நாங்கள் செயல்படுகிறோம். அதனால்தான், அவர் கடிதத்தில், தன் குழந்தை களை பார்த்து கொள்ளும்படி, ராகுலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தற்கொலை அல்ல. மாநில அரசால் நிகழ்த்தப்பட்ட கொலை. பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் அமலாக்கத் துறையின் நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்துள்ளார்.
மனோஜ் பார்மர், காங்கிரஸ் அனுதாபி. ராகுல், பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டபோது, அவருடைய குழந்தைகள், தாங்கள் சேமித்த உண்டியலை ராகுலிடம் கொடுத்தனர். இதனால்தான், பா.ஜ., நிர்வாகிகள் அவருக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெருக்கடி
காங்., கைச் சேர்ந்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வர், கமல்நாத் வெளியிட்ட அறிக்கையில், 'அமலாக்கத்துறை மற்றும் பா.ஜ.,வின் நெருக்கடியே மனோஜ் மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
'இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இதற்கு, மத்திய பிரதேச பா.ஜ., ஊடகப் பிரிவு தலைவர் ஆஷிஷ் அகர்வால் மறுப்பு தெரிவித்து, “காங்கிரஸ் ஒரு பிணந்தின்னி கழுகு. ஒருவருடைய மரணத்திலும் அக்கட்சி அரசியல் செய்கிறது.
''வழக்கின் பின்னணி தெரியாமல், பொய்யான பிரசாரம் செய்வது காங்.,கின் வாடிக்கை,” என, அவர் கூறியுள்ளார்.