'விஸ்வகர்மா சமூகத்தினருக்கு அநீதி இழைத்தது காங்கிரஸ்'
'விஸ்வகர்மா சமூகத்தினருக்கு அநீதி இழைத்தது காங்கிரஸ்'
UPDATED : செப் 21, 2024 04:51 AM
ADDED : செப் 21, 2024 12:57 AM

வார்தா, பிரதமர் விஸ்வகர்மா திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. 18 விதமான கைவினை பொருட்கள் செய்யும் கலைஞர்களை உள்ளடக்கிய விஸ்வகர்மா சமூகத்தினருக்கு திறன் மேம்பாடு மற்றும் கடன் உதவி அளித்து, அவர்களை கைதுாக்கிவிடும் இத்திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவு, நேற்று கொண்டாடப்பட்டது.
மஹாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
இன்றைக்கு நீங்கள் பார்க்கும் காங்கிரஸ் கட்சிக்கும், மஹாத்மா காந்தி போன்ற மாமனிதர்கள் இருந்த காங்கிரஸ் கட்சிக்கும் துளியும் சம்பந்தமில்லை.
விநாயகர் பூஜை
இன்றைய காங்கிரஸ் கட்சியின் மீது வெறுப்புணர்வு என்ற பேய் புகுந்துள்ளது.
வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவுக்கு எதிராக பேசுவதே அவர்கள் வழக்கம்.
அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது பிடிக்காது. அதனால் தான், நான் சமீபத்தில் பங்கேற்ற விநாயகர் பூஜை குறித்து அவர்கள் விமர்சித்தனர்.
விஸ்வகர்மா திட்டத்தின் வாயிலாக, எஸ்.சி., -- எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினர் பயனடைந்துள்ளனர். இந்த சமூகத்தினரை காங்கிரஸ் அரசு புறந்தள்ளியது. அவர்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியது.
இந்திய பாரம்பரிய திறன்களை முற்றிலுமாக ஒழிக்க ஆங்கிலேயர்கள் சதி செய்தனர். கிராமப்புற பாரம்பரிய கலைகளுக்கு மஹாத்மா காந்தி புத்துயிர் அளிக்க முயற்சித்தார்.
சுதந்திரத்திற்கு பின் ஆட்சிக்கு வந்தவர்கள் விஸ்வகர்மா சமூகத்தினரை கண்டுகொள்ளவில்லை. அவர்ளுக்கான நீதி மறுக்கப்பட்டது.கடந்த ஓராண்டில், 18 துறைகளைச் சேர்ந்த 20 லட்சம் விஸ்வகர்மா சமூகத்தினர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
திறன் மேம்பாட்டு பயிற்சி
எட்டு லட்சத்துக்கும் மேலான கைவினை கலைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
இத்திட்டத்தின் பயனாளர்களை சந்தித்து பிரதமர் உரையாடினார்.
மஹாராஷ்டிர அரசின் ஆச்சார்யா சாணக்யா திறன் மேம்பாட்டு மையத்தையும், புண்யஷ்லோக் அஹில்யாதேவி ஹோல்கர் ஸ்டார்ட் அப் திட்டத்தையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.