வேற வழி தெரியலை! புதுடில்லி சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடும் காங்கிரஸ்
வேற வழி தெரியலை! புதுடில்லி சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடும் காங்கிரஸ்
UPDATED : நவ 29, 2024 09:32 PM
ADDED : நவ 29, 2024 09:28 PM

புதுடில்லி; புதுடில்லி சட்டசபை தேர்தலில் தனித்து களம் காண்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் புதுடில்லியில், ஆம் ஆத்மியும், காங்கிரசும் இணைந்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுகளில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. தோல்விக்கு இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி கருத்துகளை வெளியிட்டு வந்தன.
கூட்டணி விவகாரத்தில் எழுந்த மோதல் காரணமாக, அடுத்தாண்டு நடக்க இருக்கும் டில்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஆம் ஆத்மி அறிவித்துவிட்டது. இந் நிலையில் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியிடன் கூட்டணி கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறி உள்ளது.
இது குறித்து புதுடில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் தெரிவித்து உள்ளதாவது; 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே முதல்வர் யார் பற்றிய முடிவை கட்சி மேலிடம் எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி சட்டசபையின் தற்போதைய காலம், 2025ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட்டுவிடும் என்பதால் பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. முன்னதாக 43 தேர்தல் பணிக்குழுக்களை பா.ஜ., அறிவித்தது. ஆம் ஆத்மி 11 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது. கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லாத சூழலில் தனித்து போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.