என் உயிருக்கு ஆபத்து... காங்கிரஸ் அரசு தான் காரணம்; பா.ஜ., எம்.எல்.சி., வெளியிட்ட வீடியோ
என் உயிருக்கு ஆபத்து... காங்கிரஸ் அரசு தான் காரணம்; பா.ஜ., எம்.எல்.சி., வெளியிட்ட வீடியோ
ADDED : டிச 20, 2024 08:20 AM

பெலகாவி: தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, அமைச்சரை ஆபாசமாக திட்டிய வழக்கில் கைதான பா.ஜ., எம்.எல்.சி., ரவி வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பா.ஜ., உறுப்பினர்களும் பதிலுக்கு கோஷம் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
இதனிடையே, பா.ஜ., எம்.எல்.சி., ரவி தன்னை ஆபாசமாக திட்டியதாக மகளிர் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மேல்சபை தலைவரிடம் புகார் அளித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சபை வளாகத்திலேயே ரவியை, அமைச்சர் லட்சுமியின் ஆதரவாளர்களால் தாக்க முயன்றனர். பின்னர், அவரை அவை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
அதன்பிறகு, அமைச்சர் லட்சுமி அளித்த புகாரின் பேரில் பா.ஜ., எம்.எல்.சி., ரவியை போலீசார் கைது செய்து, காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பொய் வழக்கு போட காங்கிரஸ் அரசு முயற்சிப்பதாகக் கூறி, ரவி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: கானாபுரா காவல்நிலையத்திற்கு இரவு 8 மணியளவில் போலீசார் அழைத்து வந்தனர். எந்த வழக்கிற்காக தன்னை அழைத்து வந்தார்கள் என்று கூறவில்லை. என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நான் கொடுத்த புகாரையும் பெற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ஏதோ நடக்கிறது. இதற்கு காங்கிரஸ் அரசு தான் முழு பொறுப்பு.
பொய் வழக்கு போட்டு என்னை கொல்ல பார்க்கிறார்கள். நான் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளேன். துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் அமைச்சர் லட்சுமி ஹெப்பல்கர் தான் பொறுப்பு. அமைச்சராக இருந்துள்ள நான், மக்கள் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். என்னை ஒரு கொலை குற்றவாளி போல நடத்துகின்றனர், எனக் கூறியுள்ளார்.