ADDED : ஜூலை 05, 2026 02:45 AM

ஹைதராபாத்: பஞ்சாப், உ.பி.,யை தொடர்ந்து, தெலுங்கானாவிலும் காங்கிரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கு காங்., ஆட்சியில் இருந்தாலும், பிரச்னை தொடர்கிறது. முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவர் கோண்டா சுரேகா.
கடந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்த இவர், அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் தினத்திற்கு முன்தினம், ஹைதராபாத் திரும்பி விட்டார். எனினும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இது, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 'முதல்வர் ரேவந்த் ரெட்டி உடனான பிரச்னையால் தான், கூட்டத்தில் சுரேகா பங்கேற்கவில்லை' என, கட்சிக்குள் பேசப்படுகிறது. இதற்கு காரணம் ஒரு கோவில்.
ஹைதராபாதிலிருந்து, 60 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது, லட்சுமி நரசிம்ம ஸ்வாமி எழுந்தருளியுள்ள யாதகிரிகுட்டா என்கிற, 1,000 ஆண்டுகள் பழமையான குகைக்கோவில். இந்த கோவில் அறக்கட்டளைக்கு, சிலரை நியமிக்கும்படி முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு கடிதம் எழுதியிருந்தார் அறநிலையத் துறை அமைச்சர் சுரேகா. ஆனால், முதல்வரோ துறை அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல், தன் விருப்பப்படி ஆட்களை நியமித்துள்ளார். இது, அமைச்சர் சுரேகாவுக்கு கோபத்தை ஏற்படுத்த, அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே காங்., - எம்.எல்.ஏ., ஒருவர், இந்த கோவில் அறக்கட்டளைக்கு சிபாரிசு செய்தவர்களை, முதல்வர் ரேவந்த் ரெட்டி நிராகரித்து விட்டார். இதனால் அந்த, எம்.எல்.ஏ.,வும் கோபத்தில் உள்ளாராம். முதல்வர் தரப்போ, 'இ தெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல; அரசியலில் இதெல்லாம் சகஜம்' என்கிறது.
