அம்பேத்கருடன் ராகுலை ஒப்பிட்ட காங் நிர்வாகி: பாஜ கண்டனம்
அம்பேத்கருடன் ராகுலை ஒப்பிட்ட காங் நிர்வாகி: பாஜ கண்டனம்
ADDED : ஜூலை 26, 2025 07:03 PM

புதுடில்லி: '' லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஓபிசி பிரிவினருக்கு இரண்டாவது அம்பேத்கராக மாறுவார்,'' என காங் முன்னாள் எம்பி உதித் ராஜ் கூறியுள்ளார். இது எஸ்டி பிரிவினருக்கும், அம்பேத்கரையும் இழிவுபடுத்துவதாக பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல், ' நான் எங்கு தவறு செய்தேன். எங்கு சிறப்பாக பணியாற்றினேன் என எனது கடந்த கால நிகழ்வுகளை ஆலோசித்து வருகிறேன். நிலம் கையகபடுத்துதல் சட்டம், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், உணவுக்கான உரிமைச்சட்டம், பழங்குடியினர் சட்டம் உள்ளிட்டவற்றில் சரியாக பணியாற்றி உள்ளேன். பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில் 'பாஸ் மார்க்' வாங்கி உள்ளேன்.
ஆனால், ஒபிசி சமுதாயத்தினரை பாதுகாக்காததே எனது வேலையில் சரியானதாக இல்லை. இதற்கு ஒபிசி பிரச்னைகளை சரியாக புரிந்து கொள்ள முடியாததே காரணம் ஆகும். தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்னை வெளிப்படையாக இருந்த காரணத்தினால், புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இதற்கு நேர்மாறாக ஓபிசி பிரிவினரின் பிரச்னை உள்ளது. அதனை புரிந்து கொண்டு இருந்தால், ஜாதிவாரி கணக்கெடுப்பை அப்போது நடத்தியிருப்பேன். அப்படி செய்யாதது எனது தவறு தான். அதனை சரி செய்ய முயற்சி செய்கிறேன் எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் எம்பி உதித் ராஜ் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், வளர்ச்சிக்கான வாய்ப்பினை வரலாறு மீண்டும் மீண்டும் வழங்காது என்பதை ஓபிசி பிரிவினர் புரிந்து கொள்ள வேண்டும். நேற்று ராகுல் சொன்னதை அவர்கள் ஆதரவு அளித்து பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால், அவர்களுக்கு அம்பேத்கர் இரண்டாம் அம்பேத்கராக மாறுவார். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக பாஜவின் செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனவல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தாழ்த்தப்பட்டவர்களையும், அம்பேத்கரையும் அவமானப்படுத்துவது என்பது காங்கிரசின் அடையாளமாக உள்ளது. அம்பேத்கரை அவமானப்படுத்தியது யார்? அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படாதது ஏன்? ஜம்மு காஷ்மீரில் அவரது அரசியல்சாசனத்தை அமல்படுத்தாதது யார்? முஸ்லிம் இட ஒதுக்கீடு குறித்து பேசியது யார்? இட ஒதுக்கீடு மோசம் எனக்கூறியவர் முன்னாள் பிரதமர் நேரு. தற்போது இந்திரா, நேருவாக இல்லாமல் இரண்டாம் அம்பேத்கராக விரும்புகின்றனர். இதன் மூலம் நேரு, இந்திரா ஆகியோர் நாட்டை தவறான பாதையில் சென்றனர் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். ஒரு குடும்பத்தை மட்டும் போற்றுவதையே காங்கிரசின் வழக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.