பிரியங்காவுக்கு எதிராக வழக்கு; காங்., தலைவர்கள் பாய்ச்சல்
பிரியங்காவுக்கு எதிராக வழக்கு; காங்., தலைவர்கள் பாய்ச்சல்
ADDED : டிச 22, 2024 08:46 AM
புதுடில்லி : வயநாட்டில் பிரியங்கா வெற்றி பெற்றதை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அக்கட்சி மலிவு விளம்பரம் தேடுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிக்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாஸ் களமிறக்கப்பட்டார்.
மறைப்பு
இந்த தேர்தலில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றிபெற்றார்.
இந்நிலையில், பிரியங்காவின் வெற்றியை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் நவ்யா ஹரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'தேர்தலுக்கான வேட்புமனுவில் தன் மற்றும் குடும்பத்தினரின் சொத்து விபரங்களை பிரியங்கா மறைத்துள்ளார்.
'உண்மையான விபரங்களை அவர் வழங்கவில்லை; இது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.
அவர் வெற்றி பெற்றது செல்லாது என்பதால், வயநாடு லோக்சபா இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர், இந்த விவகாரத்தில் பா.ஜ., மலிவு விளம்பரம் தேடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி., பிரமோத் திவாரி கூறுகையில், ''சிலர் மலிவான விளம்பரம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்; அவர்களில் ஒருவர் நவ்யா ஹரிதாஸ். பிரியங்கா வெற்றியை எதிர்த்து அவர் அளித்துள்ள மனு நிச்சயம் நிராகரிக்கப்படும்; அது மட்டுமின்றி அவருக்கு அபராதமும் விதிக்கப்படும்,” என்றார்.
உரிமை
மற்றொரு காங்., - எம்.பி.,யான மாணிக்கம் தாக்குர், “டில்லியில் ராகுலுக்கு எதிராகவும், கேரளாவில் பிரியங்காவுக்கு எதிராகவும் புகார் அளிக்க பா.ஜ.,வுக்கு உரிமை உள்ளது.
ஆனால், உண்மை எங்கள் பக்கம் மட்டுமே உள்ளது,” என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, ''பிரியங்காவின் வெற்றியை எதிர்த்து பா.ஜ., மட்டுமல்ல,; கம்யூனிஸ்ட் கட்சியும் புகார் தெரிவித்துள்ளது. அரசியல் விதிகளை மீறிஅவர் வெற்றி பெற்றது குறித்து நீதிமன்றத்தில்நிரூபிக்கப்படும்,'' என, தெரிவித்தார்.