ராஜ்யசபா எம்.பி.,யாகும் பிரியங்கா?: ஹிமாச்சலில் இருந்து அனுப்ப காங்., முடிவு
ராஜ்யசபா எம்.பி.,யாகும் பிரியங்கா?: ஹிமாச்சலில் இருந்து அனுப்ப காங்., முடிவு
UPDATED : ஜன 30, 2024 06:26 PM
ADDED : ஜன 30, 2024 12:48 PM

புதுடில்லி: ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் காலியாகும் ராஜ்யசபா எம்.பி.,க்கான தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவை போட்டியிட வைத்து எம்.பி.,யாக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாடு முழுதும் 15 மாநிலங்களில் 50 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் வரும் ஏப்.,2ம் தேதி முடிவடைகிறது. மீதமுள்ள இரண்டு மாநிலங்களை சேர்ந்த 6 எம்.பி.,க்கள் வருகின்ற ஏப்.,3ம் தேதி ஓய்வு பெறுகிறார்கள்.
இதில் உ.பி.,யில் (10), மஹாராஷ்டிரா, பீஹாரில் தலா 6, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசாவில் தலா 3, உத்தரகண்ட், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் தலா 1 என 56 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவி காலியாகிறது.
இத்தேர்தலுக்கான அறிவிப்பு பிப்.8ம் தேதி வெளியாகும். பிப்.,15ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்.,16ம் தேதி நடைபெறும். பிப்.,27ம் தேதி தேர்தல் நடைபெறும் அன்றைய தினமே, முடிவுகளும் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவை, ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
கடந்த 2022ல் ஹிமாச்சலில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் மொத்தம் 40 தொகுதிகளில் வென்றது; பா.ஜ., 25ல் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து அம்மாநிலத்திற்கான ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் பெற்றது. தற்போது ஹிமாச்சலில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளார். அந்த சீட்டை காங்., பெற்றுள்ளதால், அந்த இடத்தில் பிரியங்காவை போட்டியிட வைத்து ராஜ்யசபாவிற்கு அனுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.