ADDED : டிச 27, 2024 05:37 AM

நெலமங்களா: திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்ய டிக்கெட் வாங்கி தருவதாக கூறி, நெலமங்களா காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாசய்யாவிடம் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்த, எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத்தின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத். திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் உறுப்பினர்.
கர்நாடகாவில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்யும், டிக்கெட் வாங்கி கொடுக்கும் பணி செய்தார்.
இவரிடம் உதவியாளராக வேலை செய்த மாருதி, 35 என்பவரிடம், நெலமங்களா காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாசய்யா, திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்ய சிறப்பு டிக்கெட் வாங்குவதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 8 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்தார்.
ஆனால், சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கி தராமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும், மாருதி மோசடி செய்தார். இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி, நெலமங்களா போலீசில் சீனிவாசய்யா புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான மாருதியை தேடினர்.
தன் பெயரில் மோசடி செய்து வந்ததால், மாருதியை முன்பே பணியில் இருந்து நீக்கியதாக, விஸ்வநாத்தும் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த மாருதி, நேற்று முன்தினம் சொந்த ஊரான ராஜனுகுண்டேவுக்கு வந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அங்கு சென்ற நெலமங்களா போலீசார், மாருதியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.