நட்பு - நம்பிக்கைக்கு இடையில் தவிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி
நட்பு - நம்பிக்கைக்கு இடையில் தவிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி
ADDED : பிப் 04, 2024 11:04 PM

அண்டை மாநிலமான தமிழகத்தில் ஒரு கட்சியினர், இன்னொரு கட்சியினரை பார்த்து, சிரித்து விட்டாலே அதை பெரிய தவறாக பார்க்கின்றனர். ஆனால் கர்நாடகா அரசியல் களம் சற்று வித்தியாசமானது. இன்று ஒரு கட்சியில் இருப்பவர், நாளை வேறு கட்சிக்கு செல்வார். அங்கிருந்து இன்னொரு கட்சிக்கு செல்வார்.
ஆனாலும் முன்பு இருந்த, பழைய கட்சிகளின் நண்பர்களுடன் நட்பில் இருப்பார். இதற்கு கட்சி தலைவர்கள் எந்த எதிர்ப்பும் காட்டுவது இல்லை. இதனால் தான் கர்நாடகாவில் கட்சி மாறல் சர்வசாதாரணமாகி உள்ளது.
அதிருப்தி
இந்நிலையில், கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு, மே மாதம் தேர்தல் நடந்தது. பா.ஜ.,வில் முன்னாள் துணை முதல்வராக இருந்த, லட்சுமண் சவதி, 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் கட்சி மறுத்தது.
உடனே, காங்கிரசில் இணைந்து விட்டார். சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 80 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வும் ஆகிவிட்டார்.
ஆட்சி அமைந்து எட்டு மாதங்கள் முடிய உள்ள நிலையிலும், லட்சுமண் சவதிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியில் உள்ளார்.
அவர் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைவார் என்று, அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. காங்கிரஸ் சின்னத்தில் வெற்றி பெற்று உள்ளேன்; காங்கிரசில் இருந்து செல்ல மாட்டேன் என்று, லட்சுமண் சவதி உறுதியாக கூறினாலும், அவரது உறுதியை சீர்குலைக்க பா.ஜ.,வில் ஒரு குழு முயற்சி செய்து வருகிறது.
தினமும் பேச்சு
அந்த குழுவில் லட்சுமண் சவதியின் நெருங்கிய நண்பர்களான எம்.பி., அன்னாசாகேப், முன்னாள் எம்.பி., ரமேஷ் கட்டியும் உள்ளனர்.
லட்சுமண் சவதியிடம் தினமும் மொபைல் போனில் பேசி, 'நண்பா மீண்டும் நமது கட்சிக்கு வந்து விடு. உனக்கு எம்.பி., 'சீட்' வாங்கி தருகிறோம். உனது மகனுக்கு அதானி தொகுதி இடைத்தேர்தல் 'சீட்' வாங்கி தருகிறோம்' என்று, ஆசை காட்டி வருகின்றனர்.
நண்பர்கள் ஆசைப்படி பா.ஜ.,வுக்கு மீண்டும் சென்று விடலாம் என்று, லட்சுமண் சவதி நினைத்தாலும், அவரை செல்ல விடாமல் காங்கிரஸ் தலைவர்கள் அவர் மீது வைத்து உள்ள, நம்பிக்கை தடுக்கிறது. லட்சுமண் சவதியை, துணை முதல்வர் சிவகுமார் முழுக்க, முழுக்க நம்புகிறார்.
வாய் திறக்காதது ஏன்?
ஜெகதீஷ் ஷெட்டரை போன்று, துரோகம் செய்து விட்டு செல்ல மாட்டார். லட்சுமண் சவதி எங்கள் கட்சியில் 'ஹீரோ' என்று கூறி வருகிறார். காங்கிரஸ் அமைச்சர்களும், லட்சுமண் சவதி தான் உண்மையான மக்கள் தலைவர்.
அவர் எங்கள் கட்சியின் சொத்து, எங்கள் ஹீரோ என்று கூறி வருகின்றனர். இதனால் காங்கிரஸ்காரர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டு செல்லவும் அவருக்கு சங்கடமாக இருக்கிறது.
ஒரு பக்கம் நண்பர்கள், இன்னொரு பக்கம் காங்கிரஸ் தலைவர்களின் நம்பிக்கை என, நட்புக்கும், நம்பிக்கைக்கும் இடையில் சிக்கி தவித்து வருகிறார்.
லட்சுமண் சவதிக்கு எம்.பி., 'சீட்' வாங்கி தருகிறோம் என்று கூறும், அவரது பா.ஜ., நண்பர்கள், சட்டசபை தேர்தலில் அவருக்கு ஏன் 'சீட்' வாங்கி தரவில்லை. அவருக்கு அநீதி நடந்த போது ஏன், வாய் திறக்கவில்லை' என்றும், காங்கிரசார் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்
- நமது நிருபர் -.

