ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி!
ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி!
ADDED : பிப் 18, 2024 01:18 AM

ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில காங்கிரசில் எம்.எல்.ஏ.,க்களிடையேயான கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் பதவி அளிக்கப்பட்டதை எதிர்த்து, 12 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். சட்டசபை கூட்டத்தொடரை புறக்கணிக்க முடிவு செய்துள்ள அவர்கள், டில்லிக்கு புறப்பட்டதால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் மீது நிலமோசடி தொடர்பாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், கடந்த 31ம் தேதி அவரை கைது செய்தனர்.
ஆதரவு
இதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன், சம்பாய் சோரனை புதிய முதல்வராக பரிந்துரைத்தார்.
இதையடுத்து, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் கடந்த 2ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.
அவருடன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலம்கிர் ஆலம், ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர் சத்யானந்த் போக்தா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மொத்தம் 81 உறுப்பினர்கள் உள்ள சட்டசபையில், 47 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபித்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் ஜார்க்கண்ட் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவர் சிபு சோரனின் இளைய மகன் பசந்த் சோரன் உட்பட அக்கட்சியினர் ஐந்து பேரும், காங்கிரசை சேர்ந்த மூன்று பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், காங்கிரசின் ஆலம்கிர் ஆலம், ராமேஷ்வர் ஓரான், பன்னா குப்தா, பாதல் பத்ரலேக் ஆகியோருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இவர்கள், ராஞ்சியில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதன்பின், காங்கிரஸ் எம்.எல்.ஏ., அனுாப் சிங் கூறுகையில், 'நான்கு அமைச்சர்கள் மற்றும் பிரதீப் யாதவை தவிர்த்து நாங்கள் 12 பேரும் ஒரே முடிவில் இருக்கிறோம். நான்கு அமைச்சர்களையும் கட்டாயம் மாற்ற வேண்டும்.
'மாநிலத்தில் உள்ள ஐந்து மண்டலங்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். ராகுலின் 'ஒரு நபர், ஒரு பதவி' விதியை அமல்படுத்த விரும்புகிறோம்' என்றார்.
புதிய முகங்கள்
மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ., தீபிகா பாண்டே சிங் கூறுகையில், ''ஜே.எம்.எம்., கட்சிக்கு 29 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 17 உறுப்பினர்கள் உள்ளனர்.
''ஜே.எம்.எம்., ஏற்கனவே முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. அவர்களுக்கு ஆறு அமைச்சர்கள் உள்ளனர். அதில் ஒன்றை எங்களுக்கு தர வேண்டும்.
''புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என நாங்கள் கோருகிறோம். ஏற்கனவே பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தருவதை ஏற்க முடியாது.
''கட்சி தலைமையின் முடிவுக்கு காத்திருக்கிறோம். புதிய முகங்களை நியமிக்காவிட்டால், வரும் 23ம் தேதி முதல் நடக்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடரை புறக்கணிப்போம். டில்லி செல்ல முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
தங்கள் சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவிகளில் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளது ஆளும் ஜே.எம்.எம்., கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்திஉள்ளது.
ஆதாயத்தை எதிர்ப்பார்த்து ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபடத் துவங்கி உள்ளதாக கூறியுள்ள ஜே.எம்.எம்., கட்சி நிர்வாகிகள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.