பிரதமராக பிரியங்கா இருந்தால்... காங்., எம்.பி., சொல்வது இது தான்
பிரதமராக பிரியங்கா இருந்தால்... காங்., எம்.பி., சொல்வது இது தான்
ADDED : டிச 23, 2025 04:50 PM

புதுடில்லி: பிரியங்கா பிரதமராக இருந்திருந்தால், வங்கதேசத்தில் இன்று ஹிந்துக்களின் நிலை இப்படி இருந்திருக்காது என்று காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் தீபுசந்திரதாஸ் என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டதை கண்டித்து, அந்நாட்டில் பெரும் வன்முறை மூண்டுள்ளது. நாடு தழுவிய போராட்டங்களினால் வங்கதேசம் அமைதியிழந்து காணப்படுகிறது.
வங்கதேச நிலவரம் குறித்து இந்திய அரசியல் தலைவர்களும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். காசா பிரச்னைகளை மட்டுமே பேசுகிறார், வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களின் துயரத்தை பற்றி பேசாமல் ராகுல் புறக்கணித்து வருகிறார் என்று பாஜ குற்றம்சாட்டியது.
இந் நிலையில், பாஜ விமர்சனத்திற்கு சஹரன்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் பதிலளித்து உள்ளார். அவர் கூறியதாவது;
பாஜவுக்கு வேறு வேலை இல்லை. ராகுல் எனக்கும் பிரியங்காவுக்கும் தலைவர்தான். பிரியங்கா பற்றி ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது, நான் அவரை மையமாகக் கொண்டு, அவர் அடுத்த இந்திரா என பதிலளித்தேன்.
ராகுலும், பிரியங்காவும் இந்திராவின் இரு கண்கள். அவர்களை வித்தியாசமாக பார்க்கக்கூடாது. பிரியங்கா பிரதமராக இருந்திருந்தால், வங்கதேசத்தில் இன்று ஹிந்துக்களின் நிலை இப்படி இருந்திருக்காது என்று மட்டுமே நான் கூறியிருந்தேன்.
பிரியங்கா தலைமையில் அண்டை நாடுகள் உடனான உறவு சுமுகமாக இருந்திருக்கும். ராகுல் நாங்கள் மிகவும் மதிக்கப்படும் தலைவர். அவரின் (பிரியங்கா) அரசியல் பிரவேசம் வரவுள்ள தேர்தல்களில் காங்கிரசுக்கு மிக பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசு ராஜதந்திர ரீதியாக தோல்வி அடைந்துள்ளது. அதில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே எதிர்க்கட்சிகள் மீது பழிசுமத்துகிறது.
வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இம்ரான் மசூத் கூறினார்.

