ADDED : மார் 21, 2024 03:42 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்கு, இரண்டு தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ., மும்முரமாக தயாராகி வருகின்றன.
பிரதமர் மோடி ஏற்கனவே பிரசாரத்தை ஆர்ப்பாட்டமாக துவங்கிவிட்டார். கலபுரகி, ஷிவமொகாவில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார்.
கர்நாடகாவில் மோடி அலை அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இரண்டு முறை, 'பாரத் ஜோடோ' யாத்திரை நடத்தி, ராகுல் தன் இமேஜை அதிகமாக்கியுள்ளார்.
எனவே கர்நாடகாவில், அவர் மூலமாகவே பிரசாரத்தைத் துவக்க, காங்கிரஸ் விரும்புகிறது. பிரசாரத்துக்கு ராகுலை அழைத்து வருவது தொடர்பாக, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
சட்டசபை தேர்தலை போன்று, லோக்சபா தேர்தலுக்கும் பிரசார திட்டம் வகுக்கின்றனர். பசவகல்யாணா அல்லது குருடுமலை கோவிலில் இருந்து, பிரசாரத்தை துவங்க காங்., ஆலோசிக்கிறது.
எந்த தொகுதிகளில் ஒற்றுமையான பிரசாரம் செய்ய வேண்டுமோ, அந்த தொகுதிகளில், முதல்வர், துணை முதல்வர் சேர்ந்து பிரசாரம் செய்யவும், மற்ற தொகுதிகளில் தனித்தனியாக பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு வருகின்றனர்.

