UPDATED : ஜன 07, 2025 07:17 AM
ADDED : ஜன 07, 2025 01:10 AM

புதுடில்லி: டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.
இதையொட்டி ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், டில்லியில் வசிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கும், 'பியாரி தீதி யோஜனா' என்ற திட்டத்தை காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான சிவகுமார் நேற்று டில்லியில் கூறியதாவது:
டில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இங்கு வசிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்.
டில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.

