பயனாளர் வங்கிக்கணக்கில் 300 யூனிட் மின்சாரத்துக்கு பணம் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் வாக்குறுதி
பயனாளர் வங்கிக்கணக்கில் 300 யூனிட் மின்சாரத்துக்கு பணம் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் வாக்குறுதி
ADDED : ஜன 16, 2025 09:36 PM
சவுத் அவென்யூ:“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரத்துக்கான பணம், பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடி பரிமாற்றம் செய்யப்படும்,” என, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, புதிதாக மூன்று அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
ஏற்கனவே இரண்டு வாக்குறுதிகளை அறிவித்த நிலையில் ஏ.ஐ.சி.சி., டில்லி பொறுப்பாளர் காசி நிஜாமுதீன், டில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் ஆகியோருடன் இணைந்து நேற்று அவர் கூறியதாவது:
மதுபான கொள்கை ஊழலின் சிறிய கூட்டாளியை தெலுங்கானா அதிகாரத்தில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றியது. முக்கிய பங்காளியான அரவிந்த் கெஜ்ரிவாலை டில்லி அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டிய நேரம் இது.
டில்லியில் அரசியல் மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, பொய்களின் மாசுபாடு இருக்கிறது. காங்கிரஸை ஆட்சிக்கு தேர்ந்தெடுப்பதன் வாயிலாக மக்கள் ஒரு தீர்க்கமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பிரதமர் மோடிக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் தேசிய தலைநகருக்கு எதுவும் செய்யவில்லை.
தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு ஒரே ஆண்டில் 21,000 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது. ஆட்சிக்கு வந்த 13 மாதங்களுக்குள் தெலுங்கானாவில் தன் அனைத்து வாக்குறுதிகளையும் காங்கிரஸ் நிறைவேற்றியது. டில்லியிலும் அதையே செய்வோம்.
பொருட்களின் விலை உயர்வு மற்றும் வேலையின்மை ஆகியவை இல்லத்தரசிகளை அதிகம் பாதித்துள்ளன.
மக்களை நிலவுக்கு அனுப்புவது பற்றி மோடி பேசுகிறார். ஆனால் டில்லியில் உயிருக்கு ஆபத்தான காற்று மாசுபாட்டை அவரால் தீர்க்க முடியவில்லை.
ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு, நாட்டின் மிகப்பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பை உருவாக்கியது உட்பட முன்னோடியான பணிகளை மேற்கொண்டது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக மூன்று முறை பதவி வகித்த காலத்தில் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் ஒரு பெரிய மோசடி நடந்துள்ளது. பணம், மின்சார வினியோக நிறுவனங்களுக்கு செல்கிறது.
ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரத்துக்கான பணம், பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடி பரிமாற்றம் செய்யப்படும். இலவச ரேஷன் திட்டத்தில் ஐந்து கிலோ அரிசி, இரண்டு கிலோ சர்க்கரை, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், ஆறு கிலோ பருப்பு வகைகள், 250 கிராம் தேயிலை ஆகியவை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் கூட்டத்தில் அறிவிப்பு!
டில்லி நியாய யாத்திரையை நடத்தி, மக்களின் பிரச்னைகளை அறிந்து கொண்டோம். இதுவே இந்த ஐந்து உத்தரவாதங்களை வழங்க எங்களுக்கு உதவியது. டில்லி நியாய யாத்திரையில் இருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஐந்து உத்தரவாதங்களையும் செயல்படுத்துவோம்.
இலவச ரேஷன் திட்டத்தில் ஐந்து கிலோ அரிசி, இரண்டு கிலோ சர்க்கரை, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், ஆறு கிலோ பருப்பு வகைகள், 250 கிராம் தேயிலை ஆகியவை இருக்கும். 300 யூனிட் இலவச மின்சாரம் மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும்.
தேவேந்திர யாதவ்,
டில்லி காங்கிரஸ் தலைவர்