பா.ஜ., ஜனார்த்தன ரெட்டி மீது காங்., சசிகாந்த் செந்தில் வழக்கு
பா.ஜ., ஜனார்த்தன ரெட்டி மீது காங்., சசிகாந்த் செந்தில் வழக்கு
ADDED : செப் 07, 2025 02:54 AM

பெங்களூரு: தர்மஸ்தலா விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்திலுக்கு தொடர்பிருப்பதாக கர்நாடக பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி கூறியிருந்த நிலையில், அவர் மீது அவதுாறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.
கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது.
இதன் அருகே உள்ள ஆற்றங்கரையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பல பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக, கோவிலின் முன்னாள் துாய்மை பணியாளரான சின்னையா கூறினார்.
குற்றச்சாட் டு
இது தொடர்பாக கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவினர், தர்மஸ்தலாவின் பல இடங்களில் சோதனை நடத்தினர். அதில், பெண்களை புதைத்ததற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, பொய் புகார் கூறிய சின்னையா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்திலுக்கு தொடர்பிருப்பதாக, கர்நாடக பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.
அதில், 'தட்சிண கன்னட மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்தவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான சசிகாந்த் செந்திலுக்கு இந்த விவ காரத்தில் தொடர்பிருக்கிறது. அதேபோல், கைது செய்யப்பட்ட சின்னையாவுக்கும், அவருக்கும் தொடர் புள்ளது.
'கோவிலின் புனித தன்மையை கெடுக்கவே இருவரும் சேர்ந்து இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டனர்' என, தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜனார்த்தன ரெட்டி மீது, சசிகாந்த் செந்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இது குறித்து பெங்களூரில் சசிகாந்த் செந்தில் நேற்று கூறியதாவது:
நான் தட்சிண கன்னட மாவட்டத்தில் பணியாற்றியதாலும், தமிழர் என்பதாலும் என் மீது ஜனார்த்தன ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.
உள்நோக்கத்துடன், அடிப்படை ஆதாரமின்றி எழுப்பப்பட்ட இந்த வதந்தி குறித்து பதிலளிக்க வேண்டாம் என நினைத்தேன். இருப்பினும், அடுத்தடுத்து இதுபோன்ற குற்றச்சாட்டு எழுவதால் வழக்கு தொடர முடிவு செய்தேன்.
இந்த வழக்கு, 11ம் தேதி விசாரணைக்கு வரும்.
அப்போது, என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ஜனார்த்தன ரெட்டி பதிலளிக்க வேண்டும். என் மீது வேறு யாரேனும் அவதுாறு பரப்பினால், அவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ராஜினாமா
கடந்த, 2009ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சசிகாந்த் செந்தில், 2009 - 2012 வரை கர்நாடகாவின் பல்லாரியில் உதவி கலெக்டராக இருந்தார்.
இது, ஜனார்த்தன ரெட்டியின் சொந்த மாவட்டம். அதேபோல், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள தர்மஸ்தலா இருக்கும் தட்சிண கன்னடா மாவட்டத்தின் கலெக்டராக, 2017 - 2019 வரை சசிகாந்த் செந்தில் பணியாற்றினார்.
பின், ஐ.ஏ.எஸ்., பதவியை ராஜினாமா செய்து, 2020ல் காங்கிரசில் சேர்ந்தார். கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்டு எம்.பி.,யானார்.