இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய காங்., ரகசிய திட்டம்: பிரதமர் மோடி
இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய காங்., ரகசிய திட்டம்: பிரதமர் மோடி
ADDED : மே 10, 2024 01:06 PM

மும்பை: ‛‛ எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியிடம் ரகசிய திட்டம் வைத்துள்ளதாக'' பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் நன்துர்பர் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சி விவகாரத்தில் மோடியுடன் போட்டி போட முடியாது என தெரிந்து கொண்ட காங்கிரஸ், இந்த தேர்தலில் பொய் தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளது. மத ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது. அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்களின் முதுகில் குத்துவது போல் ஆகும். இது பெரிய பாவச்செயல்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அதில் ஒரு பங்கை முஸ்லிம்களுக்கு வழங்க மாட்டோம் என எழுதி கொடுக்க முடியுமான காங்கிரசுக்கு சவால் விடுத்தேன். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை. எனது சவால் குறித்து காங்கிரஸ் மவுனம் காப்பது என்பது அவர்களிடம் ரகசிய திட்டம் உள்ளது என்பதை காட்டுகிறது.
ராமரின் நாட்டில், ராமர் கோவிலை தேச விரோதம் என்கிறார்கள். இது தான் காங்கிரசின் மனநிலை. சமரச அரசியலுக்காக பயங்கரவாதிகளின் கல்லறையை அழகுபடுத்துபவர்கள், நமது ராமரையும், அவரது கோவிலையும், அங்கு செல்பவர்களையும் தேச விரோதிகள் என்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.