ADDED : ஜன 07, 2026 01:05 AM

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு, திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, டில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவருமான சோனியாவுக்கு, 79 வயது ஆகிறது. இவருக்கு, நேற்று முன்தினம் திடீரென சுவாச கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, டில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில், நேற்று முன்தினம் மாலை அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், டில்லியில் நிலவும் கடுங்குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக, ஆஸ்துமா பிரச்னை அதிகரித்துள்ளதால், சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனினும், அவர் வழக்கமான சோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'த ற்போது மார்பு மற்றும் நுரையீரல் நோய் நிபுணர்கள் கண்காணிப்பில் உள்ள சோனியாவுக்கு, ஆன்டிபயாடிக் மற்றும் துணை மருந்துகள் தரப்படுகின்றன. தற்போது சோனியா உடல்நிலை சீராக உள்ளது. அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்' என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

