சமரச அரசியலில் இருந்து காங்கிரசால் மீள முடியவில்லை: பிரதமர் மோடி பேச்சு
சமரச அரசியலில் இருந்து காங்கிரசால் மீள முடியவில்லை: பிரதமர் மோடி பேச்சு
UPDATED : ஏப் 09, 2024 01:21 PM
ADDED : ஏப் 09, 2024 12:29 PM

பிலிபிட் : ‛‛ சமரச அரசியலில் இருந்து காங்கிரஸ் கட்சியால் மீள முடியவில்லை'', என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பெருமை
உ.பி., மாநிலம் பிலிபிட் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நம்முன் உள்ள அனைத்து தடைகளையும் தாண்டி, எதுவும் சாத்தியம் இல்லை என்பதை இந்தியா காட்டி உள்ளது. நிலவில் இந்தியக் கொடியை சந்திரயான் ஏற்றிய போது, நமக்கு பெருமையாக இருந்தது.
அவமதிப்பு
ராமர் கோயில் கட்டுவதை ‛ இண்டியா ' கூட்டணி எதிர்த்து வருகிறது. ராமர் கோயில் அழைப்பிதழை அக்கட்சி ஏற்காமல் கடவுள் ராமரையும் அவமதித்தது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்றவர்களையும் 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி உள்ளது. சமரச அரசியலில் ஆழமாக இறங்கி உள்ள காங்கிரஸ் அதில் இருந்து வர முடியவில்லை. காங்கிரசிஸ் சொந்தமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கவில்லை. முஸ்லிம் லீக்கின் அறிக்கையை போல் உள்ளது.
ஏமாற்றுகிறது
குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரசும், சமாஜ்வாதியும் எதிர்க்கின்றன. அண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு நாம் குடியுரிமை வழங்காவிட்டால், வேறு யார் வழங்குவார்கள். துன்புறுத்தலுக்கு உள்ளான ஹிந்துக்கள், சீக்கியர்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது. நாட்டை பிரிக்க அக்கட்சி முயற்சி செய்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

