'ஜி.எஸ்.டி., - 2.0' வளர்ச்சியை முடக்காமல் எளிமையாக இருக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
'ஜி.எஸ்.டி., - 2.0' வளர்ச்சியை முடக்காமல் எளிமையாக இருக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
ADDED : ஆக 17, 2025 01:41 AM

புதுடில்லி: 'ஜி.எஸ்.டி., 2.0 என்பது வளர்ச்சியை முடக்கும் வரியாக இல்லாமல், நல்ல மற்றும் எளிமையான வரியாக இருக்க வேண்டும்' என, காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
டில்லியில் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 'நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படும்.
அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்' என தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி., 2.0 வின்படி, 12 மற்றும் 28 சதவீத அடுக்குகள் நீக்கப்பட உள்ளதாகவும், 12 சதவீத அடுக்கில் உள்ள பெரும்பாலான பொருட்கள், 5 சதவீத அடுக்குக்கு மாற்றப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், 28 சதவீத அடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள், 18 சதவீத அடுக்குக்கு மாற்றப்படும் என்றும் சொல்லப் படுகிறது.
இந்நிலையில் காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஏழு ஆண்டுகளாக, ஜி.எஸ்.டி., வரி விகிதங்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருந்தன.
இந்த சதவீத கட்டமைப்பு வரி ஏய்ப்புக்கு வழிவகுத்தன. ஆகையால், விகிதங்களின் அடுக்குகளில் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
பழைய ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், பொருளாதார வளர்ச்சி இருக்காது என்பதை, பிரதமர் மோடி இப்போது உணர்ந்துள்ளார்.
விகித கட்டமைப்பை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. 'ஜி.எஸ்.டி., 2.0' ஆனது, வளர்ச்சியை முடக்கும் வரியாக இல்லாமல், நல்ல முறையிலும், எளிமையான வகையிலும் இருக்க வேண்டும்.
அதேசமயம், மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.