சவுதியில் 26 ஆண்டுக்கு முன் கொலை: தலைமறைவு நபர் டில்லியில் சிக்கினார்
சவுதியில் 26 ஆண்டுக்கு முன் கொலை: தலைமறைவு நபர் டில்லியில் சிக்கினார்
ADDED : ஆக 17, 2025 01:38 AM
புதுடில்லி: சவுதி அரேபியாவில் ஒருவரை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த உ.பி.,யைச் சேர்ந்தவர் 26 ஆண்டுக்கு பின் டில்லியில் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது தில்ஷாத், 52. மேற்காசிய நாடான சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் மெக்கானிக்காக பணியாற்றினார். 1999ம் ஆண்டு தன்னுடன் வேலை பார்த்த ஒருவரை கொலை செய்து விட்டு நம் நாட்டுக்கு தப்பினார்.
இது தொடர்பாக சவுதி அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 2022ல் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தில்ஷாத்தை தேடினர். இந்நிலையில் கடந்த 11ல் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் அவர் சிக்கினார்.
இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:
தலைமறைவான தில்ஷாத்தை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து பல ஆண்டுகளாக தேடிவந்தோம்.
ஆனால், அவர், போலி ஆவணத்தை பயன்படுத்தி போலி முகவரியில் பாஸ்போர்ட் எடுத்து அடிக்கடி வளைகுடா நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இதையடுத்து சி.பி.ஐ., பல்வேறு தொழில்நுட்பங்களின் உதவியால் அவரது புதிய பாஸ்போர்ட் முகவரியை கண்டுபிடித்தனர்.
அந்த முகவரிக்கு தேடப்படும் குற்றவாளி என்பதற்கான, 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையறியாத தில்ஷாத் கடந்த 11ம் தேதி சவுதி அரேபியாவின் மதினாவில் இருந்து ஜெட்டா வழியாக டில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். குடியுரிமை அதிகாரிகள் அடையாளம் கண்டு தெரிவித்ததை தொடர்ந்து நாங்கள் அவரை கைது செய்தோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.