விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரசார் புகுந்து தாக்குதல்
விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரசார் புகுந்து தாக்குதல்
ADDED : டிச 10, 2024 07:11 AM
சீனிவாசப்பூர்: விவசாயிகள் நேற்று நடத்திய போராட்டத்தில், காங்கிரசார் புகுந்து தாக்குதல் நடத்தியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சீனிவாசப்பூர் வனப்பகுதியில் பல ஆண்டுகளாக விவசாயிகள் பயிரிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, வனத்துறையினர், கையகப்படுத்தினர். இதை கண்டித்து நாராயண கவுடா தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர், நேற்று சீனிவாசப்பூரில் போராட்டம் நடத்தினர்.
அப்போது, காங்கிரசை சேர்ந்த, 'முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் மீது வனப்பகுதி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக வழக்கு உள்ளது. ஆனால், அவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று கூறி, ரமேஷ்குமார் படத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர் .
இதனை அறிந்த சீனிவாசப்பூர் தொகுதி காங்கிரசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். 'நீங்கள் போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள்; வேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாக, எங்கள் தலைவர் ரமேஷ் குமார் படத்தை வைத்துக்கொண்டு ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள். அவர் படத்தை அகற்றுங்கள். அவரை சுட்டிக் காட்டுவதை நிறுத்துங்கள்' என்று கோபமாக கூறினர். இதனால், தள்ளுமுள்ளு நடந்தது.
அப்பகுதியே போர்க்களம் போல் மாறியது. போலீசார் தலையிட்டு, அமைதியை ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து விவசாய சங்கத்தினர், கோலார் எஸ்.பி., அலுவலகம் சென்று, காங்கிரசார், தங்களை தாக்கியதாக புகார் செய்தனர்.

