காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது: ஜெய்சங்கர் காட்டம்
காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது: ஜெய்சங்கர் காட்டம்
UPDATED : மே 26, 2025 05:11 PM
ADDED : மே 26, 2025 05:09 PM

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தகவல் அளித்ததாக காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக, பார்லிமென்ட் ஆலோசனைக் குழு கூட்டம் டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தகவல் அளித்ததாக காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை நடத்தப்பட்ட பின்னரே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் உண்மையை தவறாக சித்தரிக்கிறது.
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பாகிஸ்தான் பரப்பும் எந்தவொரு போலி செய்திகளையும் அகற்றுவதில் அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது.
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்பின் தலைமையகங்களை பாதுகாப்பு படையினர் துல்லியமாக தாக்கினர். இந்த நடவடிக்கை வேறு எந்த முந்தைய அரசாங்கமும் நினைத்திருக்காத ஒன்று.
3 நாடுகள் மட்டுமே!
உலகில் உள்ள 200 நாடுகளில், மூன்று நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றன, அதாவது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலகம் பாராட்டியது என்பது தெளிவாகிறது.
சில நாளில் தெரியும்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதின் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும்.பாகிஸ்தான் இந்தியாவைத் தூண்டும் வரை ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் தவிர, பாகிஸ்தானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.