பி.ஆர்.எஸ்., கட்சிக்குள் எனக்கு எதிராக சதி வலை! தெலுங்கானா 'மாஜி' முதல்வர் மகள் கட்சியில் இருந்து விலகல்
பி.ஆர்.எஸ்., கட்சிக்குள் எனக்கு எதிராக சதி வலை! தெலுங்கானா 'மாஜி' முதல்வர் மகள் கட்சியில் இருந்து விலகல்
ADDED : செப் 04, 2025 02:58 AM

ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியில் இருந்து விலகுவதாக, அவரது மகள் கவிதா அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், தன் எம்.எல்.சி., பதவியையும் ராஜினாமா செய்த அவர், கட்சிக்குள் தனக்கு எதிராக சதி வேலை நடப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
தெலுங்கானாவில், 2023 நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி, காங்கிரசிடம் படுதோல்வி அடைந்தது. காங்கிரசைச் சேர்ந்த் ரேவந்த் ரெட்டி முதல்வர் ஆனார்.
சந்திரசேகர ராவ் ஆட்சியில் கட்டப்பட்ட காலேஸ்வரம் அணை கட்டுமான முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி, சி.பி.ஐ.,க்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி சமீபத்தில் பரிந்துரைத்தார்.
சஸ்பெண்ட்
இவ்வழக்கில் சந்திரசேகர ராவ், அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளனர்.
இதனால், அதிருப்தி அடைந்த சந்திரசேகர ராவின் மகளும், எம்.எல்.சி.,யுமான கவிதா, 'என் தந்தை சந்திரசேகர ராவின் பெயரை, ஹரிஷ் ராவ், முன்னாள் எம்.பி., மேகா கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் கெடுக்கின்றனர்' என குற்றஞ்சாட்டினார்.
சொந்த கட்சி நிர்வாகிகளையே கவிதா வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, அவரை சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தார்.
இதனால், மனம் நொந்த கவிதா, தன் எம்.எல்.சி., பதவியை நேற்று அதிரடியாக ராஜினாமா செய்தார்; அத்துடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து கவிதா கூறியதாவது:
பி.ஆர்.எஸ்., கட்சியிலிருந்து திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டது, எனக்கு மிகுந்த மன வலியை கொடுத்தது. இதனால், எம்.எல்.சி., பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன்.
என் ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளேன். கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கட்சித் தலைவரும், தந்தையுமான சந்திரசேகர ராவுக்கு அனுப்பியுள்ளேன்.
ஆலோசனை நான் வேறு எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். எனினும், தெலுங்கானா ஜாக்ருதி உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்திய பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும், பி.ஆர்.எஸ்., - எம்.எல்.ஏ., ஹரிஷ் ராவும் சேர்ந்து என் குடும்பத்தை அழிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு ரேவந்த் ரெட்டி பதில் கூறியே ஆக வேண்டும். என் தந்தை மற்றும் அண்ணன் ராமா ராவுக்கு எதிராக மட்டுமே ரேவந்த் ரெட்டி வழக்கு பதிவு செய்திருக்கிறார்.
ஹரிஷ் ராவ் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது தான் காலேஸ்வரம் கட்டுமான முறைகேடு நடந்தது. ஆனால், அவருக்கு எதிராக ரேவந்த் ரெட்டி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
சட்டசபை தேர்தலின்போது என் தந்தை சந்திரசேகர ராவ் மற்றும் அண்ணன் ராமா ராவை தோற்கடிக்க, ஹரிஷ் ராவ் பணத்தை செலவழித்தார். இது பற்றி என் அண்ணனிடம் முறையிட்டும், அவர் கண்டுகொள்ளவில்லை. எனக்கு எதிரான பரப்புரையை தான் அவர் நம்பினார். கட்சிக்குள்ளேயே எனக்கு எதிராக சதி வலை பின்னப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.