கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதி: ஆம்ஆத்மி பகீர் குற்றச்சாட்டு
கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதி: ஆம்ஆத்மி பகீர் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 21, 2024 12:38 PM

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல பா.ஜ., சதி செய்துள்ளது என ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், சஞ்சய் சிங் கூறியதாவது: கெஜ்ரிவாலின் வாழ்க்கையில் பா.ஜ.,வினர் மற்றும் டில்லி கவர்னர் சக்சேனா விளையாடுகின்றனர். சிறையில் அவரை கொல்ல சதி செய்கிறார்கள். கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து டில்லி கவர்னர் மற்றும் பா.ஜ., தவறான அறிக்கைகளை வெளியிடுவது எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.
இன்சுலின்
முன்னதாக, சர்க்கரையின் அளவு அதிகரித்ததால் அவருக்கு இன்சுலின் தேவைப்பட்டபோது, கெஜ்ரிவால் மாம்பழம், பூரி சாப்பிடுகிறார். கலோரிகளை அதிகப்படுத்துகிறார் என கூறினர். இன்சுலின் கொடுக்க மறுத்துவிட்டார். அப்போது நீதிமன்றம் தலையிட்டதால், அவருக்கு இன்சுலின் கிடைத்தது. எந்த நபர் தனக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தும் சாப்பிடாமல் தன் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புவார்.
கொலை முயற்சி வழக்கு
கெஜ்ரிவாலுக்கு தீங்கு செய்ய சதி செய்கிறார்கள். அவருக்கு ஏதாவது நேர்ந்தால் பதில் சொல்ல வேண்டும். இந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் டில்லி கவர்னர் மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

