UPDATED : செப் 09, 2024 11:44 PM
ADDED : செப் 09, 2024 11:39 PM

கான்பூர், செப். 10- உத்தர பிரதேசத்தின் கான்பூரில், 'காலிந்தி எக்ஸ்பிரஸ்' ரயிலை கவிழ்க்க முயன்ற மிகப்பெரிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. தண்டவாளத்தில் சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல் குண்டுகள், தீப்பெட்டிகளை மர்ம நபர்கள் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில் மோதிய போதும், நல்ல வேளையாக சிலிண்டர் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உ.பி.,யின் பிரயாக்ராஜில் இருந்து ஹரியானாவின் பிவானிக்கு, காலிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு, வேகமாக சென்று கொண்டுஇருந்தது.
போக்குவரத்து பாதிப்பு
கான்பூருக்கு அருகே, சிவ்ராஜ்பூர் என்ற இடத்திற்கு வந்த போது, தண்டவாளத்தில் சில பொருட்கள் இருப்பதை ரயில் டிரைவர் பார்த்தார்; உடனே அவர், ரயிலை, 'சடன் பிரேக்' போட்டு நிறுத்த முயன்றார்.
எனினும், தண்டவாளத்தில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் மீது ரயில் இன்ஜின் மோதியது. இதில் காஸ் சிலிண்டர் துாக்கி வீசப்பட்டது. சிலிண்டர் வெடிக்காததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள், உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து, உ.பி., சட்டம் - ஒழுங்கு கூடுதல் காவல் கமிஷனர் ஹரிஷ் சந்திரா கூறியதாவது:
தண்டவாளத்தில் சமையல் காஸ் சிலிண்டர் இருப்பதை பார்த்தவுடன், ரயில் டிரைவர், 'எமர்ஜென்சி பிரேக்' போட்டார். எனினும், சிலிண்டர் மீது ரயில் இன்ஜின் மோதியது. அதிர்ஷ்டவசமாக, சிலிண்டர் வெடிக்கவில்லை.
![]() |
அந்த சிலிண்டரை பறிமுதல் செய்துள்ளோம். சம்பவ இடத்தில் இருந்து பெட்ரோல் குண்டுகள், தீப்பெட்டிகளை கைப்பற்றினோம்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரிகிறது. அவர்களின் இந்த திட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த நிலையில், சுவீட் பாக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இதை வைத்தும் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
கடும் நடவடிக்கை
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ரயில்வே போலீசார், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.
மேலும், தனிப்படை போலீசாரும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதில் சில குறிப்பிட்ட மத அமைப்பைச் சேர்ந்தோரிடம் விசாரிக்க உள்ளோம்.
இந்த நாசவேலையை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
![]() |
உ.பி.,யின் வாரணாசியில் இருந்து, குஜராத்தின் ஆமதாபாதுக்கு ஆக., 17ல் சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணியர் ரயில், கான்பூர் - பீம்சென் ரயில் நிலையம் இடையே, தடம் புரண்டது. இதில், 20 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின.
![]() |
சம்பவம் நடந்த போது, பயணியர் துாங்கிக் கொண்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக, இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விசாரணையில், தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், தற்போது கான்பூரில் மீண்டும் பயணியர் ரயிலை கவிழ்க்கும் நோக்கில், தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.