ADDED : டிச 14, 2024 11:13 PM

தாவணகெரே: பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தும், மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமியை சுட்டுக் கொல்ல சதி நடப்பதாக, முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா 'பகீர்' தகவல் கூறி உள்ளார்.
தாவணகெரேயில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்துவதால், மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமிகளை போராட்ட களத்தில் சுட்டுக் கொல்ல, போலீஸ் அதிகாரிகளின் சதி நடந்தது. சுவாமியை முடித்துவிட்டால் போராட்டம் நின்றுவிடும் என நினைக்கின்றனர்.
கித்துார் ராணி சென்னம்மாவின் வாரிசுகள், போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர். இதை அனைத்து சமூகத்தினரும் கண்டிக்க வேண்டும். தடியடி நடத்தியற்கு பதிலாக முத்தம் கொடுக்க வேண்டுமா என்று கேட்ட, உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் விழிப்புணர்வு என்ற மன்றத்தின் தலைவர் சிவராம், மைசூரில் நேற்று அளித்த பேட்டியில், ''பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு கொடுத்தால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எங்களிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்க நினைத்தால், மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமிகள் கையை வெட்டுவோம். அவர் பா.ஜ.,வின் ஏஜென்டாக செயல்படுகிறார். மடாதிபதியாக இருக்கவே தகுதியற்றவர். அவர் அணிந்திருக்கும் காவி உடைக்கு மரியாதை கொடுக்கிறோம். மடாதிபதியாக இருந்து வன்முறையை ஊக்குவிக்கிறார்,'' என்றார்.