எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் வாசக பெருமக்களுக்கு நன்றி!
எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் வாசக பெருமக்களுக்கு நன்றி!
UPDATED : செப் 06, 2025 11:05 PM
ADDED : செப் 06, 2025 11:00 PM

உங்கள் அபிமான தினமலர் இன்று 75-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நூற்றாண்டு கொண்டாடிய பத்திரிகைகள் இந்தியாவில் பல இருந்தாலும், தினசரி பத்திரிகை, நாளிதழ் என்று பார்க்கும்போது, தமிழகத்தின் பத்திரிகை வரலாற்றில் இந்நாள் ஒரு மைல் கல் என்று தான் சொல்ல வேண்டும்.
பொதுவாக ஒரு பத்திரிகையை நடத்துவது எவ்வளவு கடினமான காரியம் என்பதை பலரது வாயிலாக நீங்கள் அவ்வப்போது கேட்டிருப்பீர்கள். குறிப்பாக, நாளிதழ் என்று வரும்போது, மிகப்பெரிய செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் கூட தாக்குப்பிடித்து நிற்க இயலாமல் முடிவுரை எழுதிவிட்டு சென்ற வரலாறும் நீங்கள் அறியாதது அல்ல.
அத்தகைய பின்னணியில், இந்தியாவின் தென்கோடியில் வேற்றுமொழி பேசும் மக்கள் வாழும் மாநிலத்தின் இன்றைய தலைநகரில் தொடங்கப்பட்ட ஒரு தமிழ் நாளிதழ், அங்கிருந்து தனது பயணத்தை திருநெல்வேலி, திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, பாண்டிச்சேரி, கோவை, வேலுார், நாகர்கோவில், சேலம் என விரிவுபடுத்தியதோடு அல்லாமல், பெங்களூரு, புதுடில்லி என தமிழகத்துக்கு வெளியேயும் கிளைபரப்பி வேரூன்ற முடிந்திருக்கிறது என்றால் அது சாதாரண சம்பவம் அல்ல, இதுவரை கண்டிராத சரித்திர சாதனை என்று பெருமிதம் கொள்ளலாம்.
தினமலர் மீது முழு நம்பிக்கை வைத்து, அதன் சோதனை மிகுந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் அசையாத இரும்புத் தூண்கள் போல் அரணாக துணை நின்று ஊக்குவித்த லட்சோப லட்சம் தமிழ் மக்களின் அன்பும் ஆதரவும் இல்லாமல் இந்த சாதனை சாத்தியமாகி இருக்காது. அதற்காக தமிழக மக்களுக்கு தினமலர் என்றென்றும் கடன்பட்டிருக்கிறது.
கவுரவம் மிகுந்த சந்தாதாரர், அறிவார்ந்த வாசகர், உழைப்பில் சிறந்த விற்பனையாளர், சளைக்காமல் அதிகாலையில் வீடு வீடாக ஏறி இறங்கும் டெலிவரி பாய், தொலைநோக்கு கொண்ட விளம்பரதாரர் என்று உங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முகங்கள் இருக்கலாம்.
ஆனால், உள்ளம் ஒன்று; அதில் நிறைந்திருக்கும் எண்ணங்கள் நன்று. அவற்றின் வெளிப்பாடுதான் தினமலர் அடைந்துள்ள முன்னேற்றம்.
தினமலர் நிறுவனத்தின் அந்நாள் இந்நாள் ஊழியர்கள் குறித்து தனியாக சொல்ல தேவைஇல்லை. நாங்கள் ஒரே குடும்பம். குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இந்த வளர்ச்சியில் மகத்தான பங்களிப்பு இருக்கிறது.
தமிழகத்தின் வளர்ச்சியும், தினமலர் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒவ்வொரு கிராமத்தின் தேவைக்காகவும், நகரத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் பிரச்னைக்காகவும் 74 ஆண்டுகளாக இடைவிடாமல் குரல் கொடுத்து வருகிறது தினமலர்.
தமிழகமும் இந்த நாடும் எல்லா துறைகளிலும் சுபிட்சம் அடையும் வரையில் தினமலர் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிரகடனம் செய்தார். இந்த பொன்னாளில் அவரது சபதத்தை நாங்கள் மீண்டும் உரக்க வாசித்து உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.
இது தினமலர் நாளிதழின் பவள விழா மட்டுமல்ல. நாட்டுப்பற்றும் நல்ல சிந்தனையும் கொண்ட ஒவ்வொரு தமிழருக்குமான கொண்டாட்டம். ஆண்டு முழுவதும் கொண்டாடுவோம், உரையாடுவோம்.
நன்றி நன்றி நன்றி