ADDED : ஏப் 21, 2025 03:17 AM

பெட்டியா : பீஹாரில் கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனு குமார். கான்ஸ்டபிளான இவர், சிக்தா போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார்.
இதேபோல் அதே போலீஸ் ஸ்டேஷனில், போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வஜித் குமாரும் கான்ஸ்டபிளாக பணியாற்றினார்.
இருவருக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், மேற்கு சேம்பரான் மாவட்டத்தின் பெட்டியாவில் உள்ள போலீஸ் லைன் பகுதிக்கு சமீபத்தில் இருவரும் மாற்றலாகினர்.
அங்கு, நேற்று முன்தினம் இரவு இருவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், சர்வஜித் குமார் தன் சர்வீஸ் ரிவால்வரை எடுத்து சோனு குமாரை நோக்கி சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த சர்வஜித் குமார், தப்பியோட முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார், சர்வஜித் குமாரை சுற்றிவளைத்து பிடித்தனர்.
அவரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

