காங்.,- வி.சி.,- ம.தி.மு.க., கட்சிகளுடன் இன்றும், 10ம் தேதியும் உடன்பாடு?
காங்.,- வி.சி.,- ம.தி.மு.க., கட்சிகளுடன் இன்றும், 10ம் தேதியும் உடன்பாடு?
ADDED : மார் 08, 2024 12:02 AM

தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளுடன் இன்றும், நாளை மறு தினம் தொகுதி உடன்பாடு மேற்கொள்ள, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு அடம்பிடிக்கின்றன.
ஆர்வம்
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவிடம் தொலைபேசியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் நேரிலும் முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதையடுத்து, அவர்கள் இருவரும் தொகுதி பங்கீடு உடன்பாட்டில் கையெழுத்திட, சென்னை அறிவாலயத்திற்கு இன்று வருவதற்கு இசைவு
தெரிவித்துள்ளனர்.இன்று சிவராத்திரி நல்ல நாள் என்பதால், கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீட்டை முடித்துக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றன. அதேபோல, நாளை மறுதினம், அமாவாசை தினம் என்பதால், அன்றைய தினத்தில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
இந்த மூன்று கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை முடித்தபின், இறுதியாக மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுத்த தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தொகுதி பங்கீட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள டி.ஆர்.பாலு, நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி, ஆ.ராஜா, சிவா ஆகியோர் அடங்கிய குழுவுடன் நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இறுதி முடிவு
அப்போது, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் இழுபறியில் இருக்கிற தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கொடுப்பது குறித்த இறுதி முடிவை நேற்று இரவுக்குள் எடுக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிவராத்திரி, அமாவாசை தினங்களில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க., வட்டாரங்களில் எழுந்துள்ளது.- நமது நிருபர் -

