எந்த கோவில் நிதியிலிருந்தும் கட்டடங்கள் கட்டுவது.. கூடாது! ஐகோர்ட் தீர்ப்பு
எந்த கோவில் நிதியிலிருந்தும் கட்டடங்கள் கட்டுவது.. கூடாது! ஐகோர்ட் தீர்ப்பு
ADDED : ஆக 28, 2025 11:37 PM

மதுரை : பழனி தண்டாயுதபாணி கோவில் நிதியில் இருந்து திருமண மண்டபம் கட்டும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த ஐகோர்ட் கிளையின் உத்தரவை சுட்டிக்காட்டி, 'கோவில் நிதியை, அரசு நிதியாக கருத முடியாது. அந்நிதியை மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோவில்களுக்கு சொந்தமான நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் என, பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்களை அமைக்கும் தமிழக அறநிலையத்துறையின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கோவில்களுக்கு சொந்தமான நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்க அறநிலையத்துறை, 2021 - 2022ல் அறிவிப்பு வெளியிட்டது; இது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது.
கோவில் நிதியை, ஹிந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச்சகர், ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல், ஹிந்து மதம், தத்துவம் அல்லது சாஸ்திரங்கள் ஆய்வு அல்லது கோவில் கட்டடக்கலை பயிற்றுவிக்கும் பல்கலை, கல்லுாரியை நிறுவுதல், ஹிந்து குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் இல்லங்கள், பக்தர்களின் நலனுக்கான மருத்துவமனைகள், மருந்தகங்கள் நிறுவ பயன்படுத்த வேண்டும்.
திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்கும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுபோல், மேலும் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன்
ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து கோவில்களுக்கு நிதி வசூலிக்கப்படுகிறது. மத நோக்கங்களுக்காக அல்லது திருவிழாக்கள் நடத்த அல்லது கோவில்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக நன்கொடை வழங்கப்படுகிறது.
கோவில் நிதியை பொது அல்லது அரசு நிதியாக கருத முடியாது. அதை பொது நோக்கங்களுக்காக அரசின் நிதியாக பயன்படுத்த முடியாது.
கோவில் நிதியில், வணிக நோக்கில் திருமண மண்டபங்கள் உட்பட கட்டடங்கள் அமைப்பது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது என, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிதியிலிருந்து திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைக்கு எதிரான மற்றொரு வழக்கில் இந்நீதிமன்றம் ஆக., 19ல் உத்தரவிட்டது. அதே உத்தரவு இவ்வழக்கிற்கும் பொருந்தும்.
கோவில் நிதியில் வணிக வளாகம், கல்வி நிறுவனம், திருமண மண்டபங்கள் அமைக்கும் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதே தீர்ப்பை வலியுறுத்தி, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் வெங்கடேஷ் சவுரிராஜன் தாக்கல் செய்த பொதுநல மனுவிலும், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
கள்ளழகர் கோவில்சவுரிராஜன் மனுவில் கூறியிருந்ததாவது:
மதுரை, அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில், 40 கோடி ரூபாயில் கழிப்பறை, பேவர் பிளாக் பதித்தல், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கடைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணியை மேற்கொள்ள, தமிழக அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டது.
இதன் அடிப்படையில், கோவில் அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. பணியை கோவில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதித்தது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிராஜ் அனிருத் ஆஜரானார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கோவில் கடைகளில் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் தான் அதிகம் உள்ளன. பூஜை பொருட்கள் குறைந்த அளவில் தான் உள்ளன. கோவில் கடைகளில் பூஜை பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என, உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
கோவில் நிதியை அரசின் நிதியாக கருத முடியாது. அந்நிதியை மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக நோக்கில் பயன்படுத்தக்கூடாது. கடைகள், உணவருந்தும் கூடம், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த இரு தீர்ப்புகளும், அறநிலையத் துறையின் கோவில் நிதிப் பயன்பாட்டுத் தொடர்பான உத்தரவு அனைத்தையும் ரத்து செய்துள்ளன.