ADDED : மார் 16, 2025 11:29 PM

மைசூரு: கர்நாடக அரசின், மைசூரு மாநகராட்சியை, 'கிரேட்டர் மைசூராக' மாற்றுவது தொடர்பாக, 'கிரேட்டர் மைசூரு: சிக்கல்கள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
பெங்களூரு மாநகராட்சியை, கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சியாக மாற்றுவது போன்று, மைசூரு மாநகராட்சியை, கிரேட்டர் மைசூராக மாற்ற, கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது.
இது தொடர்பான அறிக்கை தயாரிக்க, மைசூரு கலெக்டர், மைசூரு மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டிருந்தது.
மைசூரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.எஸ்.ரங்கப்பா அரங்கில், பல்கலைக்கழக திட்டமிடல், கட்டட கலை; ஐ.டி.பி.எல்., எனும் இந்திய நகர திட்டமிடல் நிறுவனம் இணைந்து, 'கிரேட்டர் மைசூரு: சிக்கல்கள், சவால்கள்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
பல்கலைக்கழக பதிவாளர் சவிதா துவக்கி வைத்து பேசியதாவது:
மாநில அரசு, கிரேட்டர் மைசூருக்கான திட்டத்தை முன்னெடுத்து செல்கிறது. நகரை மேம்படுத்தும் போது, பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் திட்டமிட வேண்டும்.
இதில், மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம், மக்கள் பிரதிநிதிகள், கட்டடகலை நிபுணர்கள், மைசூரு மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிப்பர்.
மைசூரு நகரின் குடியிருப்பு, வர்த்தக பகுதிகள் சமமாகவும், மக்கள் வசிக்கும் வகையில் இயற்கையாகவும் இருக்க வேண்டும்.
அரசின் திட்டத்தை வழிநடத்துவதில் மாநகராட்சியும், முடாவும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் பாதிப்பை ஏற்படுத்த கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று, தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.