'கன்டெய்னர்' லாரியில் தீ; 40 பைக்குகள் எரிந்து நாசம்
'கன்டெய்னர்' லாரியில் தீ; 40 பைக்குகள் எரிந்து நாசம்
ADDED : டிச 16, 2025 12:13 AM

பல்லாரி: 'கன்டெய்னர்' லாரியில் தீப்பற்றியதில், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 40 பைக்குகள் தீயில் எரிந்து நாசமாகின.
தமிழகத்தின் சென்னையில் இருந்து, 'யமஹா' நிறுவனத்தின் பைக்குகள் ஏற்றிய கன்டெய்னர் லாரி, கர்நாடக மாநிலம், பல்லாரியில் உள்ள ஷோரூமுக்கு, நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நேற்று காலை பல்லாரியின், அனந்தபூர் சாலையில், ஆடோநகர் அருகில் வரும் போது, ஓய்வெடுப்பதற்காக, ஓட்டுநர், லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளேயே அமர்ந்திருந்தார்.
அப்போது, லாரியின் இன்ஜின் பகுதியில் இருந்து அடர்ந்த புகை வருவதை கவனித்த ஓட்டுநர், பீதியடைந்து வெளியே குதித்தார். சிறிது நேரத்தில் லாரி முழுதும் தீ பற்றியதில், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 40 பைக்குகள் எரிந்து நாசமாகின.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். எனினும், அதற்குள் பைக்குகள் சேதமடைந்தன. இது தொடர்பாக, பல்லாரியின் காந்தி நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. 'இன்ஜினில் தீப்பிடித்து, லாரி முழுதும் பரவியிருக்கலாம்' என, போலீசார் கருதுகின்றனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.

