சிக்கோடி தொகுதியில் போட்டி காங்., - எம்.எல்.சி., மறுப்பு
சிக்கோடி தொகுதியில் போட்டி காங்., - எம்.எல்.சி., மறுப்பு
ADDED : மார் 12, 2024 03:12 AM

பெலகாவி: “நானோ, என் மகனோ லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை,” என, காங்கிரஸ் எம்.எல்.சி., பிரகாஷ் ஹுக்கேரி தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சி காங்கிரசில் வேட்பாளர் தேர்வு விஷயத்தில், குழப்பம் நீடிக்கிறது. குறிப்பாக பெலகாவியின் சிக்கோடி லோக்சபா தொகுதிக்கு, யார் வேட்பாளர் என்ற கேள்விக்கு, இன்னும் பதில் கிடைக்கவில்லை.
மூத்த எம்.எல்.சி., பிரகாஷ் ஹுக்கேரியை களமிறக்க, காங்கிரஸ் மேலிடம் முயற்சிக்கிறது. ஆனால் அவரோ, “என்னை பலிகடா ஆக்காதீர்கள்,” என, காட்டமாக கூறி விட்டார். அவரது மனதை கரைக்க, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் முயற்சி செய்கின்றனர். முயற்சி பலனளிக்குமா என்பது, இன்னும் சில நாட்களில் தெரியும்.
பெலகாவியில் பிரகாஷ் ஹுக்கேரி கூறியதாவது:
நானோ அல்லது என் மகனோ, லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டோம். சிக்கோடி தொகுதியில் குருபர் சமுதாயத்தினருக்கு சீட் கொடுத்தால், அவரை வெற்றி பெற பாடுபடுவோம்.
கடந்த 2014ல், நான் அமைச்சராக இருந்தும், முதல்வரின் உத்தரவுப்படி, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அப்போது, என் மகன் கணேஷ் ஹுக்கேரியை அமைச்சராக்குவதாக உறுதி அளித்திருந்தனர். ஆனால், இப்போது அவர் எம்.எல்.ஏ.,வாக இருந்தும், அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை.
நானோ, என் மகனோ அமைச்சர் பதவி கேட்கவில்லை. இனியும் கேட்க மாட்டோம். தற்போது லோக்சபா தேர்தலில் போட்டியிடும்படி நெருக்கடி கொடுக்கின்றனர். சிக்கோடி தொகுதியில் நான் போட்டியிட்டால் வெற்றி பெறுவேனென, கட்சி மேலிடம் நம்புகிறது. ஆனால் எந்த காரணத்தை கொண்டும், லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

