கர்நாடகாவில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு
கர்நாடகாவில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு
UPDATED : ஜூலை 05, 2024 04:49 PM
ADDED : ஜூலை 05, 2024 04:13 PM

பெங்களூரு: தென் மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
உயர்வு
124.80 அடி கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 99.70 அடி ஆக உள்ளது. இந்த அணையில் 22.27 டிஎம்சி தண்ணீரும், கபினி அணையில் 17.25 டிஎம்சி நீரும் உள்ளன. காவிரி படுகையில் உள்ள ஹேமாவதி அணையில் 15.83 டிஎம்சி, ஹரங்கி அணையில் 4.58 டிஎம்சி தண்ணீரும் உள்ளது.
சிருங்கேரி
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சிருங்கேரி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள கெரேகட்டேயில் 234.8 மிமீ.,, கிக்காவில் 193.6 மிமீ., சிருங்கேரி மையப்பகுதியில் 151.14 மிமீ மழை பதிவாகி உள்ளது. கொப்பா மற்றும் முடிகெரே உள்ளிட்ட பகுதிகளிலும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வெள்ளம்
சிவமோகா மாவட்டத்தில், கனமழை காரணமாக துங்கா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடமாக செயல்பட்ட காந்தி மைதானம் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அங்குள்ள சங்கராகோவிலும் தண்ணீரால் சூழப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் ஆற்றில் குளிக்க இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
அடித்து செல்லப்பட்ட கார்
முடிகெரே தாலுகாவில், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், கார் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. டிரைவர் அ திர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பத்ரா நதியில், கலசா மற்றும் ஹோரநாடு பகுதியை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பன இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அபாயம்@
உத்தர கன்னடாவில் பெய்யும் கனமழை காரணமாக அகநாசினி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சிக்மகளூரு மாவட்டத்தில் சர்மாடி படித்துரை பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள தடுப்பு சுவர்கள் விரிசல் அடைந்து விழும் அபாயம் உள்ளது.
எச்சரிக்கை
இதனிடையே, வரும் 12ம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது.