ஜம்மு காஷ்மீரில் தொடரும் பதற்றம்; 6 தொழிலாளர்கள் 1 டாக்டர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் தொடரும் பதற்றம்; 6 தொழிலாளர்கள் 1 டாக்டர் சுட்டுக்கொலை
UPDATED : அக் 20, 2024 11:57 PM
ADDED : அக் 20, 2024 10:19 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் எனும் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடைபெற்று வருகிறது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் ஒருவரும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இதையடுத்து, பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில், அனந்த்நாக் பகுதியில் தங்கி, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அசோக் சவுகான் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஷோபியான் மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதன் பிறகு நடந்த மற்றொரு சம்பவம் இதுவாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான உமர் அப்துல்லா, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார்.