ADDED : ஜன 28, 2025 06:25 AM

மைசூரு : மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் நெருக்கடியால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் அடாவடி அதிகமாகி வருகிறது. பல மாவட்டங்களில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வேறு கிராமங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
சிலர் தற்கொலையும் செய்து கொண்டனர். இதனால் நிதி நிறுவனங்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இவ்விவகாரம் கர்நாடக அரசியலில் பூகம்பத்தை கிளப்பியது.
பாதிக்கப்பட்டோர் நிதி நிறுவனங்கள் குறித்து அரசிடம் முறையிட்டனர். இதற்கு காங்கிரஸ் அரசும் நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியது.
இதுகுறித்து முதல்வர் முன்னிலையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இருப்பினும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் நெருக்கடியால் தற்கொலைகள் தொடர்கின்றன.
மைசூரு, நஞ்சன்கூடு தாலுகா, அம்பாளே கிராமத்தைச் சேர்ந்வர் ஜெய்ஷீலா, 53. இவர் விவசாயம் செய்து, மாடுகள் வளர்த்து வந்தார்.
பால் பண்ணை துவங்குவதற்காகவும், பசுக்கள் வாங்குவதற்காகவும் பல மைக்ரோ நிறுவனங்களிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.
எதிர்பாராத விதமாக பசுக்கள் நோய் வாய்ப்பட்டு இறந்தன. இதனால் பால் வியாபாரம் செய்ய முடியாமல் போனது. இதற்கிடையில் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் அவரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
மனமுடைந்து போனவர், சோகத்தில் சுற்றித் திரிந்துள்ளார். விரக்தியின் உச்சத்திற்குச் சென்றவர் நேற்று ஹூல்லஹள்ளி நகரில் உள்ள தன் பண்ணையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த நஞ்சன்கூடு ஊரக போலீசார் விசாரணை நடத்தினர்.
பைனான்ஸ் நிறுவனத்தின் தொல்லை தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து எஸ்.பி., விஷ்ணுவர்தன் கூறுகையில், ''தற்கொலைக்கான சரியான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.

