ADDED : அக் 16, 2024 10:20 PM
பெங்களூரு : பெங்களூரில் மூன்றாவது நாளாக மழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரத்தால், பெங்களூரு உட்பட சுற்று வட்டாரத்தில் இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மூன்றாவது நாளாக நேற்றும் மழை பெய்தது. முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கல்லுாரிகள் மட்டும் இயங்கின. மழையில் நனைந்து கொண்டே மாணவ - மாணவியர் சென்றனர்.
மழையால் பாதிக்கப்பட்ட எலஹங்காவின் கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ரமணஸ்ரீ கலிபோர்னியா லே அவுட்டில், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று ஆய்வு செய்து மீட்பு பணிகளை கண்காணித்தார்.
வீடுகளில் இருந்த மக்கள் டிராக்டர்கள் வாயிலாக, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஹொரமாவு சாய் லே - அவுட் முழுதும் வெள்ளம் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்தனர். 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால், மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர்.
'மழை பெய்யும் போதெல்லாம், தங்களுக்கு இதே நிலை தான்; யாரும் கண்டு கொள்வதில்லை' என்று அப்பகுதியினர் அங்கலாய்த்தனர்.
வெளிவட்ட சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், தொட்டநெகுந்தி, மாரத்தஹள்ளி, காடுபீசனஹள்ளி, தேவரபீசனஹள்ளி, சார்ஜாபூர் சாலை பகுதிகளில் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இந்திரா நகர் 17வது, 'டி' தெரு முழுதும் தண்ணீர் தேங்கியதால், அப்பகுதி மக்கள் வெளியே நடமாட முடியாமல் அவதிப்பட்டனர். 'எவ்வளவு கூறியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று அதிருப்தி வெளிப்படுத்தினர்.
நாகவாராவில் உள்ள மான்யதா தகவல் தொழில்நுட்ப பூங்காவை வெள்ளம் சூழ்ந்ததால், பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால், நேற்று ஒரு நாள் பெங்களூரில் ஐ.டி., ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 'பெங்களூரு உட்பட 12 மாவட்டங்களில் ஐந்து நாட்கள் மழை பெய்யும்' என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.