நாக்கை கட்டுப்படுத்துங்கள்! ஜமீருக்கு எடியூரப்பா கண்டனம்
நாக்கை கட்டுப்படுத்துங்கள்! ஜமீருக்கு எடியூரப்பா கண்டனம்
ADDED : நவ 12, 2024 06:09 AM

பெங்களூரு: ''மற்றவரை விமர்சிக்கும்போது, நாக்கை கட்டுப்படுத்த வேண்டும்,'' என, அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்தார்.
ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணா தொகுதியில், நேற்று முன் தினம் இரவு காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வருக்கு ஆதரவாக, அமைச்சர் ஜமீர் அகமது கான் பிரசாரம் செய்தார். அப்போது அவர், 'யோகேஸ்வர் வெவ்வேறு கட்சிகளில் வேலை செய்தவர். அவருக்கு ம.ஜ.த.,வில் இணைய விருப்பமில்லை. எனவே காங்கிரசில் சேர்ந்தார்.
'பா.ஜ.,வை விட கரியன் குமாரசாமி மிகவும் ஆபத்தானவர். முஸ்லிம் சமுதாயம், வீடு வீடாக பணம் சேகரித்து, குமாரசாமியின் மொத்த குடும்பத்தையும் விலைக்கு வாங்கும் சக்தி கொண்டது' என கூறினார். இது பெரும் சர்ச்சைக்கு காரணமானது.
இதுதொடர்பாக நேற்று, முன்னாள் முதல்வர் எடியூரப்பா அளித்த பேட்டி:
நாம் யாரை பற்றி விமர்சித்தாலும், அது ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும். தரக்குறைவாக பேசுவது யாருக்கும் மதிப்பை தராது. அமைச்சர் ஜமீர் அகமது கான், மற்றவர்களை பற்றி பேசும்போது, நாக்கை கட்டுப்படுத்த வேண்டும்.
இடைத்தேர்தல் நடக்கவுள்ள, மூன்று சட்டசபை தொகுதிகளிலும், கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். ஷிகாவியில் இரண்டு நாட்கள், சண்டூரில் இரண்டு நாட்கள் பிரசாரம் செய்தேன். வாக்காளர்கள் அமோக ஆதரவு அளித்தனர். மாநில அரசு மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது.
சூழ்நிலை எங்களுக்கு சாதகமாக உள்ளது. பிரதமர் மோடியின் பெயர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் சிறப்பு முயற்சி, எங்களின் வெற்றிக்கு உதவியாக இருக்கும். காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.

