வர்த்தக பேச்சு சிறப்பாக நடக்குது: மோடி சிறந்த மனிதர், எனது நண்பர் என்கிறார் அதிபர் டிரம்ப்
வர்த்தக பேச்சு சிறப்பாக நடக்குது: மோடி சிறந்த மனிதர், எனது நண்பர் என்கிறார் அதிபர் டிரம்ப்
ADDED : நவ 07, 2025 07:21 AM

வாஷிங்டன்: பிரதமர் மோடி எனது நண்பர், அவர் சிறந்த மனிதர். இந்தியா உடனான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா பெரும்பாலும் நிறுத்திவிட்டது. பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர்.
அவர் என்னுடைய நண்பர், நாங்கள் பேசுகிறோம், அவர் நான் அங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். நான் செல்வேன். பிரதமர் மோடி உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடந்து வருகிறது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.
டிரம்ப் பதில்!
அடுத்த ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, 'இருக்கலாம், ஆம்' என்று அதிபர் டிரம்ப் பதிலளித்தார்.
அமெரிக்காவின் கடுமையான வரிகளை விதிக்கும் முடிவை தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் குவாட் உச்சி மாநாட்டிற்காக அமெரிக்க அதிபர் இனி இந்தியாவுக்கு வர மாட்டார் என தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் தான் இந்திய பயணம் குறித்து அதிபர் டிரம்ப் பதில் வந்துள்ளது.
முதல்முறையல்ல!
பிரதமர் மோடியை டிரம்ப் புகழ்ந்து பேசுவது முதல்முறையல்ல. அவர் பலமுறை மோடியை சிறந்த நண்பர், சிறந்த மனிதர் என பாராட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

