சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ்., மீண்டும் பணியிட மாற்றம்
சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ்., மீண்டும் பணியிட மாற்றம்
ADDED : ஏப் 29, 2025 02:00 AM

ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலை நிலம் தொடர்பான விவகாரத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவால் சர்ச்சையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, ஹைதராபாதில் உள்ள ஹைதராபாத் மத்திய பல்கலைக்கு சொந்தமான, 400 ஏக்கர் நிலத்தில் மரங்கள் வெட்டப்பட்டன. தனியாருக்கு வழங்குவதற்காக இந்த நிலத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்ட படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த படத்தை, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஸ்மிதா சபர்வாலும் பகிர்ந்தார்.
இது தொடர்பாக சைபராபாத் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, சமீபத்தில் போலீசில் ஸ்மிதா சபர்வால் ஆஜரானார். அப்போது, 2,000க்கும் மேற்பட்டோர் படத்தை பகிர்ந்துள்ள நிலையில், தன்னை மட்டும் விசாரிப்பது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேற்று முன்தினம், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில், ஸ்மிதா சபர்வாலும் ஒருவர். இளைஞர் மேம்பாடு, சுற்றுலா, கலாசாரத் துறை சிறப்பு தலைமைச் செயலராக இருந்த அவர், தற்போது மாநில நிதி கமிஷன் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முந்தைய பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியில் முதல்வர் அலுவலகத்தில் செயலராக இருந்த ஸ்மிதா சபர்வால், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, தெலுங்கானா நிதி கமிஷன் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு நவம்பரில் அங்கிருந்து மாற்றப்பட்ட அவர், தற்போது மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

