பெங்., மாநகராட்சி சிற்றுண்டி செலவு ரூ.99 லட்சம் டெண்டரால் சர்ச்சை
பெங்., மாநகராட்சி சிற்றுண்டி செலவு ரூ.99 லட்சம் டெண்டரால் சர்ச்சை
ADDED : மார் 20, 2025 04:45 AM

பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி சார்பில் நடத்தும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் ஓராண்டுக்கு 99 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு உணவு, சிற்றுண்டி வகைக்கு, ஓராண்டுக்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
டெண்டர் தொகை 99 லட்சம் ரூபாய் ஆகும். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும்படி, மார்ச் 17ம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
டெண்டர் விண்ணப்ப படிவங்களை, கர்நாடக அரசின் கே.பி.பி., இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். மார்ச் 20 வரை மட்டுமே கூடுதல் தகவல்களை பெற வேண்டும்.
மார்ச் 25ம் தேதி மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும் என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிகள், கூட்டங்களில் உணவு, சிற்றுண்டிக்காக 99 லட்சம் ரூபாய் செலவிட முற்பட்ட மாநகராட்சியை பலரும் கண்டித்துள்ளனர். சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது குறித்து, 'எக்ஸ் தளத்தில் சிலர் கூறியுள்ளதாவது:
பெங்களூரு மாநகராட்சியை போன்று, வெட்கம் கெட்ட நிறுவனம் வேறு ஒன்று இல்லை. மாநகராட்சி மட்டுமின்றி, அரசின் அனைத்து துறைகளும், உணவு, சிற்றுண்டிக்காகவே பணத்தை வீணாக செலவிடுகின்றனர்.
அதிகாரிகள் உணவு, சிற்றுண்டியை சாப்பிடுகின்றனரோ இல்லையோ தெரியாது. ஆனால் பணம் அதிகாரிகளின் பாக்கெட்டுக்கு செல்கிறது.
நிகழ்ச்சிகள், கூட்டங்கள் என்ற பெயரில், டெண்டர் மூலம் வரவழைக்கப்படும் உணவும், சிற்றுண்டியும் அதிகாரிகளின் வீடுகளுக்கு செல்கிறது. சாலைகளின் பள்ளங்கள் அப்படியே இருக்கட்டும். அதிகாரிகள் சமோசா சாப்பிடட்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளன.